Published : 24 Dec 2023 06:43 PM
Last Updated : 24 Dec 2023 06:43 PM
புதுடெல்லி: இனி மல்யுத்த கூட்டமைப்புக்கு என்ன நடந்தாலும் அது என் கவலை இல்லை என்று அக்கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக அமைப்பை மத்திய விளையாட்டுத் துறை இடைநீக்கம் செய்து அறிவித்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வான சஞ்சய் சிங், 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில் உள்ள நந்தினி நகரில் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளிட்டார். இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் விஷயத்தில் நிலவும் கடும் அதிருப்தி காரணமாக அந்த நிர்வாக அமைப்பை இடைநீக்கம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த இடைநீக்கம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங், கூறுகையில், "நான் 12 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். நான் சரியானாவனா இல்லையா என்பதை காலம் தீர்மானிக்கும். ஒரு வகையில் நான் மல்யுத்தத்தில் இருந்து துறவு கொள்கிறேன். மல்யுத்தத்தில் இருந்து என்னை விலக்கிக்கொள்கிறேன். இப்போது என்ன செய்ய வேண்டுமோ அதை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பினர் செய்வார்கள். கூட்டமைப்பு, அரசுடன் பேச வேண்டுமா அல்லது நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டுமா என்பதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிறது எனக்கு அதிக வேலை இருக்கிறது.
புதிய தலைவராக தேர்வாகியுள்ள சஞ்சய் சிங், எனக்கு நெருக்கமானவரே தவிர உறவினர் இல்லை. மல்யுத்தத்துடன் தொடர்புடைய அனைவரும் எனக்கு நெருக்கமானவர்களே. கடந்த 11 மாதங்களாக தேசிய மற்றும் மாநில அளவில் எந்தப் போட்டியும் நடைபெறவில்லை. மல்யுத்த வீரர்கள் ஒரு வருடத்தை வீணாக்க வேண்டாமே என்ற எண்ணத்தில் புதிய நிர்வாகிகள் அவசர முடிவு எடுத்திருப்பார்கள். மல்யுத்தத்தில் இருந்து எனது ஓய்வு டிச.21 ல் இருந்து அமலுக்கு வருகிறது. இனி நான் எதிர்காலத்தை பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார். 6 முறை எம்பியாக இருக்கும் பிரிஜ் பூஷண் சரண் சிங், 5 முறை பாஜகவின் சார்பிலும், 1 முறை சமாஜ்வாதி கட்சி சார்பிலும் வெற்றி பெற்றுள்ளார். அவர் கைசர்காஞ்சி மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
முன்னதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில், மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் பல முறை தள்ளிப்போனது. இந்த நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் டிச.21 (வியாழக்கிழமை) தேதி டெல்லியில் நடைபெற்றது. தேர்தலில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் வீரங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டப்பட்டவருமான பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங் மொத்தமுள்ள 47 வாக்குகளில் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்ததோடு, தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாக கூறி, கடந்த 22ம் தேதி விருதை பிரதமர் இல்லத்தின் வாசலில் வைத்துவிட்டுச் சென்றார். இந்த இருவரை தொடர்ந்து வீரேந்தர் சிங்கும் மல்யுத்த விளையாட்டில் ஈடுபட போவதில்லை என அறிவித்தார்.
இந்தநிலையில் இடைநீக்க விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஹரியாணா இந்திய தேசிய லோக் தள் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அபய் சிங் சவுதாலா, ஹரியாணாக்காரர்கள் தலையிடும் போது ஆதிக்கம் எல்லாம் பறந்தோடிப் போகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், மல்யுத்த கூட்டமைப்பின் புதிய அறிவிப்பு குறித்து ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற வீரங்கனையான சாக்ஷி மாலி-ன் பதிவு மத்திய அரசின் தலையீட்டைத் தூண்டியுள்ளது என்று தெரிவித்தார்.
சாக்ஷி மாலிக் கருத்து: மத்திய அரசின் இடைநீக்க முடிவினை வரவேற்றுள்ள சாக்ஷி மாலிக், முடிவு குறித்து கூறுகையில், "நான் இன்னும் எழுத்துப்பூர்வமாக எதையும் பார்க்கவில்லை. புதிய தலைவர் மட்டுமா அல்லது ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. எங்களது போராட்டம் அரசாங்கத்துக்கு எதிரானது இல்லை. எங்களது போராட்டம் மல்யுத்த வீராங்கனைகளுக்கானது. நான் ஓய்வை அறிவித்துள்ளேன். ஆனால் வரும் வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.
இதனிடையே இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக அமைப்பை உருவாக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்தினை (ஐஒஏ) மத்திய விளையாட்டுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. ஐஒஏ-வுக்கு விளையாட்டுத் துறை எழுதியுள்ள கடிதத்தில், தற்காலிக அமைப்பு வீரர்கள் தேர்வு உள்ளிட்ட மல்லயுத்த அமைப்பின் அனைத்து விவகாரங்களையும் கவனிக்கட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT