Published : 24 Dec 2023 04:00 PM
Last Updated : 24 Dec 2023 04:00 PM

‘நிதிஷ், லாலு இதை ஏற்றுக்கொள்கிறார்களா?’- இந்தி பேசுபவர்கள் பற்றிய தயாநிதி மாறன் பேச்சு குறித்து பாஜக சாடல்

கோப்புப்படம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், பிஹாரில் இருந்து தமிழகத்துக்கு வரும் இந்தி பேசுபவர்கள் இங்கே சாலை அமைக்கும் பணிகள், கட்டுமான பணிகள், கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளைத்தான் செய்கிறார்கள் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசியிருப்பதற்கு பாஜக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சமூகவலை தளத்தில் வைரலாகி வரும் திமுக எம்பியின் பேச்சை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சத் பூனாவல்லா, தயாநிதியின் பேச்சுக்காக இரண்டு மாநில இண்டியா கூட்டணித் தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார். அந்த வீடியோவில் தயாநிதி மாறன், ஆங்கிலம் படித்தவர்களையும், இந்தி படித்தவர்களையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். ஆங்கிலம் படித்தவர்கள் மென்பொருள் நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்துடன் வேலை செய்வதாகவும், இந்தி மட்டும் படித்து தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் சாலை அமைக்கும் பணிகள், கட்டுமான பணிகள், கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளைத்தான் செய்கிறார்கள் என்றும் பேசியுள்ளார்.

இது குறித்து பூனாவல்லா வெளியிட்டுள்ள பதிவில், "மீண்டும் ஒரு பிரித்தாளும் முயற்சி நடந்துள்ளது. முதலில் ராகுல் காந்தி வட இந்திய வாக்காளர்களை அவமதித்தார். பின்னர் ரேவந்த் ரெட்டி பிஹார் டிஎன்ஏ வை அவமதித்தார். அதற்கும் பின்னர் திமுக எம்.பி. செந்தில் குமார் கோமூத்திர மாநிலங்கள் என்று பேசினார். இப்போது தயாநிதிமாறன் இந்தி பேசுபவர்களையும் வடக்கையும் அவதூறாக பேசியுள்ளார். இந்துக்களை, சனாதனத்தை அவமதிப்பது, பிரித்தாளும் (divide and rule card) விளையாட்டை செய்வது இண்டியா கூட்டணியின் டிஎன்ஏவிலே உள்ளது. நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட கூட்டணியினர் எதுவும் நடக்காதது போல இருக்கப் போகிறார்களா? எப்போது ஒரு நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

— Shehzad Jai Hind (@Shehzad_Ind) December 23, 2023

தயாநிதி மாறனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிஹார் பாஜக எம்.பி. கிரிராஜ் சிங் தனது எக்ஸ் தள பக்கத்தில், "இந்தி பேசும் மக்கள் பற்றிய கூட்டணி கட்சி எம்பியின் பேச்சை நிதிஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் ஏற்றுக்கொள்கிறார்களா? திமுகவும் இண்டியா கூட்டணியினரும் ஏன் இந்தி பேசும் மக்களை இவ்வளவு வெறுக்கிறார்கள் என்று தெளிவு படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பிஹார் மக்களை அவமதிப்பதை திமுக தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மற்றொரு பாஜக எம்.பி. ரவி சங்கர் பிரசாத், இண்டியா கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் ஆட்சியில் பிஹார் மக்கள் அங்கு சென்று வேலை பார்க்கும் நிலையில் உள்ளனர்" என்று சாடியுள்ளார்.

தேஜஸ்வி கண்டனம்: திமுக எம்பி தயாநிதியின் பேச்சுக்கு பிஹார் துணை முதல்வர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக கருணாநிதி தலைவராக இருந்த கட்சி. சமூக நீதியில் நம்பிக்கையுள்ள கட்சி திமுக. திமுக தலைவர்கள் யாராவது பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச மாநில மக்களைப் பற்றி ஏதாவது பேசியிருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அதில் எங்களுக்கு உடன்பாடும் கிடையாது. உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹார் தொழிலாளர்கள் நாடு முழுவதும் விரும்பப்படுகிறார்கள். அப்படி ஏதாவது அறிக்கை வந்திருந்தால் அதை நாங்கள் கண்டிக்கிறோம்.

குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சுத்தம் செய்யும் வேலையைச் செய்கிறார்கள் என்று அவர் பேசியிருந்தால் அது அர்த்தமுள்ளதாகி இருக்கும். குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் ஏன் சுத்தம் செய்யும் பணியினைச் செய்யவேண்டும். ஆனால் பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச மாநில மக்கள் கழிவறைகளை சுத்தம் செய்ய வருகிறார்கள் என்று பேசியிருந்தால் அது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற கருத்துக்கள் தெரிவிப்பதை தலைவர்கள் தவிர்க்க வேண்டும். இது ஒரே நாடு. பிஹார் மக்களாகிய நாங்கள் பிற பகுதிகளில் உள்ள மக்களை மதிக்கிறோம். நாங்களும் அதையே எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x