Published : 24 Dec 2023 05:34 AM
Last Updated : 24 Dec 2023 05:34 AM

ரூ.50 லட்சம் பெற்றதாக நிதி மோசடி வழக்கு: அமலாக்கத் துறை முன் கார்த்தி சிதம்பரம் ஆஜர்

கார்த்தி சிதம்பரம்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்தபோது, சீன நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விசா பெற்று தந்ததற்காக, வேதாந்தா குழும நிறுவனத்திடம் இருந்து ரூ.50 லட்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜரானார்.

மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மின்சாரம் மற்றும் எஃகு துறையில் புதிய உற்பத்தி மையங்கள் தொடங்குவதற்கு ‘ப்ராஜெக்ட் விசா’ விதிமுறைகள் கடந்த 2010-ம்ஆண்டு கொண்டுவரப்பட்டன. ஆனால் இந்த விசாக்களை மீண்டும் பயன்படுத்த முடியாது. எனினும், அரிய மற்றும் விதிவிலக்குள்ள விஷயங்களில் உள்துறை செயலாளர் அனுமதியுடன் மீண்டும் விசாவழங்குவது குறித்து பரிசீலிக்க விதிகள் உள்ளன.

அப்போது வேதாந்தா குழுமத்தை சேர்ந்த தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் (டிஎஸ்பிஎல்) என்றநிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்திமையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது.

ஆனால் இந்தப் பணிகள் முடிய காலதாமதமானது. இதனால் சீன நிறுவனத்தின் 263 ஊழியர்களுக்கு ப்ராஜெக்ட் விசாவை மீண்டும் பயன்படுத்தும் அனுமதியை உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுத் தர கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது கூட்டாளி பாஸ்கர ராமன் ஆகியோரின் உதவியை வேதாந்தா குழுமத்தின் ஊழியர் ஒருவர் நாடியுள்ளார்.

ரூ.50 லட்சம்: இந்த ப்ராஜெக்ட் விசாவைமீண்டும் பயன்படுத்தும் அனுமதியை பெற்றுத் தந்ததற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டதாக சிபிஐ குற்றம் சுமத்தியது. இது தொடர்பாக சிதம்பரம் வீட்டில் கடந்தாண்டு சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பாஸ்கர ராமனை கைது செய்தனர்.

சிபிஐ புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை நிதிமோசடி வழக்கு பதிவு செய்து சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த 12 மற்றும் 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்த விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராக வில்லை. இந்நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜரானார். அவரது வாக்குமூலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர். இது தொடர்பான ஆவணங்களை கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளார். இன்னும் பல ஆவணங்களை சேகரித்து வழங்க கூடுதல் கால அவகாசத்தை கார்த்தி சிதம்பரம் கோரினார்.

இந்த விசாரணைக்குப் பின் பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம், ‘‘சீன ஊழியர் ஒருவருக்கு கூட விசா பெற்றத் தர நான் ஒருபோதும் உதவவில்லை. இந்த வழக்கு என்னை தொந்தரவு செய்யும் நடவடிக்கை. எனது தந்தையை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அமலாக் கத் துறை விசாரணையில் சம்பந்தம் இல்லாத கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டன’’ என கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x