Published : 30 Jan 2018 09:42 AM
Last Updated : 30 Jan 2018 09:42 AM
உத்தரப் பிரதேசத்தில் ஆதார் அட்டை இல்லாததால் பிரசவம் பார்க்க மறுத்ததால் பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு உறவினர்களே பிரசவம் பார்த்துள்ளனர். மருத்துவமனை வாயிலருகே சுகாதாரமற்ற சூழலில் குழந்தை பிறந்தது.
உத்தரப் பிரதேச மாநில ஜவுன்பூரில் உள்ள ஷாகஞ்ச் சமுதாய மருத்துவ மையத்துக்கு பிரசவ வலியில் இருந்த பெண்ணை உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவ மையம் அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டது. ஆதார் அட்டையும், வங்கிக் கணக்கும் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது எனக் கூறிவிட்டது.
இதனால், அந்தப் பெண்ணை உறவினர்கள் வெளியே கூட்டிச் சென்றனர். ஆனால், அதற்குள் அவருக்கு குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் வாயில் அருகேயே சுகாதாரமற்ற சூழலில் அப்பெண் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை ஒரு மணி நேரத்துக்கு மேலாக தரையில் கிடத்தப்பட்டிருந்தது.
அவ்வழியாக சென்ற ஒருவர் மருத்துவமனையின் புறக்கணிப்புக்கு எதிராக குரல் எழுப்பினார். மேலும், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கும் அவர் தகவல் அளித்தார். அப்பெண் பிரசவ வழியில் துடிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறினார்.
மாநிலத்தில் மருத்துவ வசதிகள் சிறப்பாக இருப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிவரும் நிலையில், பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு ஆதார் இல்லாததால் பிரசவம் பார்க்க மறுத்திருப்பது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT