Published : 23 Dec 2023 06:16 PM
Last Updated : 23 Dec 2023 06:16 PM

“அரசின் செயல் வேதனை தருகிறது” - உத்தராகண்ட் மீட்புப் பணியில் உதவிய ‘எலி வளை’ தொழிலாளர்கள் அதிருப்தி

சில்க்யாரா சுரங்கத்தில் நடைபெற்ற மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த எலிவளை சுரங்க தொழிலாளர்கள் | கோப்புப் படம்

டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் பெரிதும் உதவிய ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளர்கள், அம்மாநில முதல்வர் தங்களுக்கு வழங்கிய ரூ.50,000-க்கான காசோலையை மாற்ற மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், முதல்வரின் செயல் தாங்கள் ஆற்றிய பணிக்கு ஏற்புடையதாக இல்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்டில் சில்க்யாரா - பர்கோட் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் நவ 12-ம் தேதி எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு அவை தொடர் தோல்வியில் முடிந்தன. இந்தச் சூழலில் தொழிலாளர்களை மீட்கும் இறுதி முயற்சியாக டெல்லியில் இருந்து 24 ‘எலி வளை’சுரங்க தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இயந்திரம் 47 மீட்டர் துளையிட்ட நிலையில் மீதமுள்ள 13 மீட்டர் தொலைவை கை வேலைப்பாடாக துளையிட ‘எலி வளை’தொழிலாளர்கள் களமிறங்கினர். அசூர வேகத்தில் இயங்கிய அவர்கள் 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தொலைவு சுரங்கம் தோண்டி இரும்பு குழாய்களை வெற்றிகரமாக பொருத்தினர். இதன்மூலம் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பின்னர் நவ.28ம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்தச் சுரங்கப் பாதை மீட்புப் பணியில் இக்கட்டான சூழலில் இறுதி கட்டத்தில் களமிறங்கி கலக்கிய ‘எலி வளை’சுரங்கத்தொழிலாளர்களின் பணி மகத்தானது. இதன்மூலம் ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்கள் உலகம் முழுவதும் ஒரே நாளில் ஹீரோவாக கொண்டாடப்பட்டனர். இந்த நிலையில், மீட்பு பணியில் ஈடுபட்ட ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்களுக்கு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தலா ரூ.50,000-க்கான காசோலை வழங்கி கவுரவித்தார். ஆனால், இந்த காசோலைகளை பணமாக மாற்ற மறுப்பு தெரிவித்துள்ள தொழிலாளர்கள், “முதல்வரின் செயல், எங்களின் பணிக்கு ஏற்புடையதாக இல்லை” என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்கள் குழுவுக்கு தலைமை தாங்கிய வகில் ஹஸ்ஸன் கூறும்போது, "அது நம்பிக்கை இழந்திருந்த சூழல். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை நெருங்கும் முயற்சியில் இயந்திரங்கள் தோல்வியடைந்திருந்த நிலையில் நாங்கள் களமிறங்கினோம். எந்தவிதமான முன்நிபந்தனைகளுமின்றி எங்கள் உயிரைப் பணயம் வைத்து இடிபாடுகளை கைகளால் தோண்டி அகற்றினோம்.

முதல்வரின் செயலை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால், எங்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து அதிருப்தியே எங்களுக்கு. அந்த மீட்புப் பணியில் ‘எலி வளை’சுரங்க தொழிலாளர்கள் பணி முக்கியமானது. ஆனால், அரசு அவர்களுக்கு வழங்கிய சன்மானம் துரதிர்ஷ்டவசமாக போதுமானதாக இல்லை. மாநில அரசால் கவுரவிக்கப்பட்ட 12 எலி வளை தொழிலாளர்களும் வழங்கப்பட்ட காசோலையை பணமாக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்.

காசோலை வழங்கப்பட்ட அன்றே நான் எங்களது அதிருப்தியை முதல்வரிடம் தெரிவித்தேன். இன்னும் ஒரு சில தினங்களில் எங்களைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து நாங்கள் வீடு திரும்பியுள்ளோம். எங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றால் நாங்கள் காசோலைகளை திரும்பக் கொடுத்துவிடுவோம்" என்று அவர் கூறினார். மேலும், சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட‘எலி வளை’ சுரங்க தொழிலாளர்களுக்கு ஒரு நிரந்தர வேலையே நாங்கள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்தோம் என்று ஹஸ்ஸன் தெரிவித்தார்.

ஹஸ்ஸனின் ராக்வெல் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்பவரும், மீட்பு பணியின் போது சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களை முதலில் சென்று சேர்ந்தவருமான முன்னா கூறுகையில், "உள்ளே சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் கிட்டத்தட்ட நாங்கள் மரணத்தின் வாயில் வரை சென்று பணியாற்றினோம். விஷயம் மனித உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் சிக்கியிருப்பவர்களை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் எங்கள் வீட்டிலிருந்தவர்களின் பேச்சைக் கூட கேட்காமல் பணி செய்தோம். எங்களின் பணியுடன் ஒப்பிடும்போது ரூ.50,000 காசோலை என்பது மிகவும் சொற்பமானதே. நிரந்தர வேலை அல்லது வசிக்க ஒரு வீடு என்பது சரியாக இருக்கும்" என்றார். முன்னா 8-க்கு 10 அறையில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x