Published : 23 Dec 2023 05:56 AM
Last Updated : 23 Dec 2023 05:56 AM
புதுடெல்லி: குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும். இதில் தலைமை விருந்தினராக பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம்.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முதலில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஜனவரியில் இந்தியா வர இயலாது என தெரிவித்துவிட்டார். இதையடுத்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, குடியரசு தினவிழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரானை, பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் பயணம் மேற்கொண்டபோது நேரில் சந்தித்து பேசினார். அங்கு நடைபெற்ற பேஸ்டில் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி சென்றிருந்தார். இந்த அணிவகுப்பில் இந்திய பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 241 வீரர்களும் பங்கேற்றனர்.
அதன்பின் டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வந்திருந்தார். அப்போது இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பல்வேறு துறைகளில் இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் பிரான்ஸ் தலைவர்கள் கலந்து கொள்வது இது 6-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT