Published : 23 Dec 2023 06:02 AM
Last Updated : 23 Dec 2023 06:02 AM
புதுடெல்லி: தனியார் ஊடகத்துக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது. நாடு முழுவதும் மக்களின் பங்களிப்போடு தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
உலக நாடுகள் ஒன்றை, ஒன்று சார்ந்து செயல்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் நலனை முன்னிறுத்தி வெளியுறவு கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம். இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்களுக்கு முழு அளவில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இரு நாடுகள் திட்டத்தின் மூலம் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. அந்த பிராந்திய தலைவர்களுடன் தொடர்பில் உள்ளேன். பாலஸ்தீனத்தில் அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்.
இந்தியாவின் பொருளாதாரம் வெளிநாட்டு முதலீடுகளை சார்ந்திருக்கிறது. பலவீனமான நிலையில் இருக்கிறது என்று கடந்த 2013-ம் ஆண்டில் மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது. பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்தியாவின் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை எட்டி உள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில் 3-வது பெரிய நாடு என்ற நிலையை எட்டுவோம். வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக உருவெடுப்போம்.
சீனாவுடன் இந்தியாவை ஒப்பிட கூடாது. அதற்குப் பதிலாக இதர ஜனநாயக நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடலாம். ஒரு காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் பார்சி இன மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். அவர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்து மகிழ்ச்சியாக, வளமாக வாழ்கின்றனர். இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக எவ்வித பாகுபாடும் காட்டப்படுவது இல்லை என்பது பார்சி இன மக்களின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
எங்களுக்கு எதிராக நாள்தோறும் விமர்சன கணைகள் வீசப்படுகின்றன. நாளிதழ்களின் தலையங்கம், தொலைக்காட்சி சேனல் விவாதங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விமர்சிப்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அதேநேரம் இந்திய ஜனநாயகத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் விமர்சனங்களை முன்வைப்பது மிகுந்த கவலையளிக்கிறது. ஜனநாயகம், பன்முகத்தன்மையை இந்திய மக்கள் கட்டி காப்பாற்றி வருகின்றனர். அவற்றை சீர்குலைக்கும் வகையில் கருத்துகளை கூறுவதைஏற்க முடியாது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு மோசமான எதிர்காலத்தை சந்திக்க நேரிடும் என்று ஆங்கிலேயர்கள் எச்சரித்தனர். அவர்களின் கணிப்பு தற்போது பொய்யாகிவிட்டது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT