Published : 23 Dec 2023 06:16 AM
Last Updated : 23 Dec 2023 06:16 AM

நடிகை ஜாக்குலினுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிடுவேன்: சிறையில் இருந்தபடி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடிதம்

நடிகை ஜாக்குலினுடன் சுகேஷ் சந்திரசேகர்.

புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் உள்ளார். அவர் சிறையிலிருந்தபடியே டெல்லியை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.200 கோடியை மோசடியாக பெற்றதாக மீண்டும் கைதாகியுள்ளார்.

இந்நிலையில் பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை நடத்தப்பட்டது. சுகேஷும் ஜாக்குலினும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ.10 கோடி வரை பரிசுப் பொருட்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், சுகேஷுடன் காதல் இல்லை என்று ஜாக்குலின் மறுத்து வந்தார். இந்நிலையில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஜாக்குலினை சுகேஷுக்கு அறிமுகம் செய்து வைத்த பிங்கி இரானியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், தன்னைப் பற்றிய எந்தத் தகவலையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊடகங்களுக்கு வெளியிடக் கூடாது என்று இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு உடனடியாகத் தடைவிதிக்குமாறு டெல்லி நீதிமன் றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், ஜாக்குலின், பாட்டியாலா நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

அந்த மனுவில் ஜாக்குலின் கூறும்போது, சுகேஷ் சந்திரசேகர் என்னைப் பற்றி மேலும் கடிதங்கள், அறிக்கைகள் அல்லது செய்திகளை வெளியிட அனுமதிக்க வேண்டாம் என நீதிமன்றம் உத்தர விடவேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலின் பெர்னான்டஸுனுக்கு சுகேஷ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப் பதாவது:

உண்மையை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும். என் கனவில் கூட இதை நான் எதிர்பார்க்கவே இல்லை, எனது இதயம் எப்பொழுதும் நொறுங்கியோ அல்லது உடைந்தோ இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் உண்மையை உணர்வது ஒருவருக்கு மிகவும் முக்கியமானது, உங்களை யாரும் முதுகில் குத்தவோ அல்லது உங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவோ அனுமதிக்க முடியாது. உன்னுடைய செயலால் அதிர்ச்சி அடைகிறேன்.

உன்னுடைய நடவடிக்கை என்னை பிசாசாக மாற்றியுள்ளது. உண்மையை அம்பலப்படுத்துவதைத் தவிர வேறு எனக்கு வழியில்லை நொறுங்கிய இதயத்துடன், காயப்படவோ, உணர்ச்சியற்றதாகவோ அல்லது அமைதியாகவோ இருக்க வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன்.

உண்மை மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை ஒருவர் அறிந்து கொள்ளவேண்டும். இப்போது உலகம் உண்மையையும் யதார்த்தத்தையும் அறியவேண்டிய நேரம் வந்துவிட்டது. உண்மையை சட்டப்படி நான் வெளியே சொல்வேன். உன்னைப் பாதுகாக்க இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த கண்ணுக்குத் தெரியாத அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றம், மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு முன் சமர்ப்பிப்பேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

செல்போனில் இருவரும் நடத்திய சாட்கள், ஸ்கிரீன்ஷாட், குரல் பதிவுகள், வெளிநாடு நிதி வர்த்தகப் பரிவர்த்தனை, முதலீடு ஆகிய வற்றையும் வெளியே சொல்வதாக அந்த கடிதத்தில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார். ஆனால் கடிதத்தில் நடிகை ஜாக்குலின் பெயரை குறிப்பிடாமல் பெண், உன்னை நம்பினேன், மோசம் போனேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் ஜாக்குலினைத்தான் குறிப்பிட்டு அதில் எழுதியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஜாக்குலின் மட்டுமல்லாது அவரின் சகோதரர் மற்றும் தாயாருக்கும் கூட சுகேஷ் பரிசுப் பொருள்கள் மற்றும் பணம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. பரிசுப் பொருட்கள் கொடுத்ததற்கான அனைத்து ஆதாரங்களும் அவரிடம் உள்ளதாகத் தெரிகிறது. அந்த ஆதாரங்களை சுகேஷ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பட்சத்தில், அது ஜாக்குலினுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x