Published : 23 Dec 2023 07:24 AM
Last Updated : 23 Dec 2023 07:24 AM
பெங்களூரு: ‘‘வறட்சி நிவாரண நிதி கேட்பதற்கு சொகுசு விமானத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா சென்றது ஏன்?’’ என அம்மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த 20ம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது கர்நாடகா வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் ரூ. 17 ஆயிரம் கோடியை நிவாரணமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோவை கர்நாடக அமைச்சர் ஜாஹிர் அகமது நேற்று சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார். இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறியதாவது:
கர்நாடக மாநில மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் வேளையில் முதல்வர் சித்தராமையாவும், அவரது அமைச்சர்களும், பயணிகள் விமானத்தில் செல்லாமல், தனியான சொகுசு விமானத்தில் டெல்லிக்கு சென்றுள்ளனர். மக்களின் வரி பணத்தை தங்களின் சொகுசு வசதிக்காக வீணாக்கியுள்ளனர். வறட்சி நிதி கேட்பதற்கு கூட மக்களின் வரி பணத்தை வீணாக்குவது தான் காங்கிரஸ் பின்பற்றும் நியாயமா?
காங்கிரஸ் அரசின் இந்த செயலுக்கு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். தன்னை எளிமையானவராக காட்டிக்கொள்ளும் சித்தராமையா சொகுசு ஜெட் விமானத்தில் பயணித்தது ஏன்?.இவ்வாறு விஜயேந்திரா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சித்தராமையா, ‘‘பாஜகவினர் முதலில் இந்த கேள்வியை பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து கேட்க வேண்டும். அவர் ஒவ்வொரு முறையும் எந்த விமானத்தில் பயணிக்கிறார்? அவரது பயண செலவுக்காக மக்களின் வரிப்பணம் செலவிடப்படவில்லையா?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT