Published : 22 Dec 2023 12:58 PM
Last Updated : 22 Dec 2023 12:58 PM

பிரதமர் வேட்பாளராக கார்கேவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட விவகாரம்: நிதிஷ் குமாருடன் ராகுல் காந்தி பேச்சு

கோப்புப்படம்

புதுடெல்லி: இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே பெயர் முன்மொழியப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை அழைத்துப் பேசியுள்ளார்.

இருவரின் உரையாடல் குறித்த முழு தகவல்கள் வெளியாகாத நிலையில், நடந்து முடிந்த இண்டியா கூட்டணி கட்சிக் கூட்டம் குறித்து இருவரும் உரையாடியிருக்கலாம் என்று ஊகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி வட்டராங்கள் கூறுகையில், “இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்மொழிந்தது தொடர்பாக காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து ராகுல் காந்தி நிதிஷ்குமாருக்கு விளக்கினார். இரண்டு தலைவர்களும் இண்டியா கூட்டணியின் பலங்கள் குறித்தும் விவாதித்தனர்” என்று தெரிவித்தனர்.

இண்டியா கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லி அசோகாஓட்டலில் செவ்வாய்க்கிழமை (டிச.19) மாலை நடைபெற்றது. இதில் முதல்வர்கள் மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மக்களவைத் தேர்தல் முடிவுக்குப்பின் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார் என மம்தா பானர்ஜி திங்கள்கிழமை அறிவித்திருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை, இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என மம்தா பானர்ஜி கூட்டத்தில் விருப்பம் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதில் இருந்து எப்போதும் விலகியிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், இத்திட்டத்தை வழிமொழிந்தார். எதிர்க்கட்சி கூட்டணியில் மல்லிகார்ஜுன கார்கே முக்கியமான தலித் தலைவர் என்பதால், இந்த திட்டத்துக்கு இண்டியா கூட்டணியில் உள்ள 12 தலைவர்கள் உடனடியாக ஒப்புதல் தெரிவித்தனர்.

இது சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தலாம் என்பதை உணர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, இத்திட்டத்துக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துவிட்டார். ‘‘நான் கீழ்தட்டு மக்களுக்காக பணியாற்றவே விரும்புகிறேன் என்றும், இண்டியா கூட்டணி முதலில் வெற்றி பெற வேண்டும், வெற்றி பெறுவதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். பெரும்பான்மை எம்.பி.க்களை பெறுவதற்கு முன்பாக பிரதமர் வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதில் பயன் இல்லை’’ என கார்கே தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x