Published : 22 Dec 2023 11:51 AM
Last Updated : 22 Dec 2023 11:51 AM
புதுடெல்லி: ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில், 'ராம் லல்லா'வின் கும்பாபிஷேக விழாவுக்கு மக்களை அழைக்கும் நிகழ்ச்சிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கின.
அயோத்தியில் நடைபெறும் 'பிரான் பிரதிஷ்டா' (Pran Pratishtha) எனப்படும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள சுமார் 6,000 பேருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ராமர் கோயிலின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மூவருக்கும் தனித்தனியாக அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், எச்.டி.தேவே கவுடா ஆகியோருக்கும் இந்த விழாவுக்கான அழைப்பிதழ்கள் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அவர்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த விழாவில் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்களா என்ற கேள்விக்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளதாவது, “கட்சியின் நிலைப்பாடு குறித்து உங்களுக்குத் தெரியும். விழாவில் பங்கேற்பது குறித்து ஜனவரி 22ஆம் தேதி தெரியும். அவர்கள் எங்களை அழைத்திருக்கிறார்கள், எங்களை அழைத்ததற்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
முன்னதாக, இந்த நிகழ்வில் சோனியா காந்தி அல்லது காங்கிரஸ் தரப்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் வரவிருக்கும் நாட்களில் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT