Published : 22 Dec 2023 06:54 AM
Last Updated : 22 Dec 2023 06:54 AM
புதுடெல்லி: உத்தரபிரதேசம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், ஜனவரி 22-ல் திறக்கப்படுகிறது. இந்த விழாவின் முக்கிய விருந்தினராக பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். இக்கோயில் அமைக்கும் பணியில் காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தற்போதைய சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
ஜெயேந்திரர், தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ராமர் கோயில் கட்டுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இக்கோயில் பணியில் பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்குடன் இணைந்திருந்தார். கடந்த 2002-ல் பாபர் மசூதி மற்றும் ராமர் கோயில் வழக்கின் வாதிகளான இந்து-முஸ்லிம்களிடம் சமாதானம் பேசி பிரச்சினைக்கு தீர்வுகாணவும் முயன்றார். இவரது முயற்சி வெற்றிபெறவில்லை. எனினும் அதற்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆதரவு அளித்திருந்தார். இதன் காரணமாக, அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் ஜெயேந்திரருக்கும் ஒரு நினைவுச்சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் வாராணசி மூத்த பண்டிதர்களில் ஒருவரான தமிழர் சந்திரசேகர் திராவிட் கூறும்போது, “வாராணசி காசி விஸ்வநாதர் கோயிலில் அதை கட்டிய ராணி அஹில்யாபாய் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதுபோல், அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் ஜெயேந்திரர் நினைவாக அவருக்கும் ஒரு சிலை வைக்கப்பட வேண்டும். இதை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் வலியுறுத்தி இருந்தார்” என்றார்.
தற்போதைய காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரும் அயோத்தி ராமர் கோயில் அமைப்பதில் பல ஆலோசனைகள் அளித்து முக்கியப் பங்கு வகித்துள்ளார். கோயில் கட்டுவதற்காக பூமி பூஜையன்று கருங்காலி மரத்தில் நவரத்தினங்கள் பதித்த சங்குவையும், காஞ்சியிலிருந்து 2 செங்கற்களும், ஐந்து தங்கக் காசுகளும் (ஜயா,பத்ரா, நந்தா, ரிக்தா பூர்ணா), பூமி பூஜை மற்றும் சகலருக்கும் நன்மை தருகின்ற விவரங்கள் அடங்கிய தாமரைப் பட்டயமும் அவர் அனுப்பியிருந்தார்.
ஸ்ரீ விஜயேந்திரர் கூறியபடியே நல்ல நாள்குறிக்கவும், ராமர் சிலை அமைக்கும் பிராண் பிரதிஷ்ட சமாரோஹம் செய்யவும் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டனர். ராமர் கோயில் திறப்பிற்கு நல்ல நாள் குறித்தவர், தமிழரான ஸ்ரீகணேஷ்வர சாஸ்திரி திராவிட் ஆவார். இவர் ஏற்கெனவே ராமர் கோயில் பூமி பூஜைக்காகவும், விஜயேந்திரர் வழிகாட்டுதலில் நல்ல நாள் குறித்துள்ளார். வாராணசியில் பிரதமர் மோடியால் புனரமைத்து துவக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் இவரே நாள் குறித்தவர் ஆவார். இந்த ஸ்ரீகணேஷ்வர சாஸ்திரி, ஜோதிட சாஸ்திர நிபுணராகக் கருதப்படுகிறார்.
வாராணசியின் ஹனுமர் படித்துறையில் தமிழக பிராமணர்கள் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் சுமார் 200 வருடங்களுக்கு முன் கும்பகோணம் அருகே உள்ள திருவிசைநல்லூர் எனும் கிராமத்திலிருந்து வந்தவர்கள். இவர்களில் ஒருவரான ராஜேஷ்வர சாஸ்திரி திராவிட், காசி ராஜாவிற்கு ராஜகுருவாக இருந்தார். முதல் காசிதமிழ்ச் சங்கமத்தை துவக்கி வைத்த பிரதமர்மோடியும் இதை தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். பத்மவிபூஷன் பட்டம் பெற்றவரான இந்த ராஜேஷ்வர் சாஸ்திரியின் மூன்றாவது மகன்தான் ஸ்ரீகணேஷ்வர சாஸ்திரி திராவிட் ஆவார்.
சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கூறியதன் பேரில்ராமர் சிலையின் பிராண் பிரதிஷ்ட சமாரோஹம் (சிலையை உயிர்ப்பித்தல்) பணிக்குவாராணசியின் பிரபல பண்டிதரான லஷ்மிகாந்த் மதுரநாத் தீட்சித் (86) தலைமை வகிக்கிறார். இவர், 17-ம் நூற்றாண்டில் வாராணசியில் வாழ்ந்த பண்டிதரான கங்கா பட் எனும்சம்ஸ்கிருதம் மற்றும் வேத அறிஞரின் பரம்பரையில் வந்தவர். மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜிக்கு 1674-ம் ஆண்டில் பட்டாபிஷேகம் செய்து வைக்க வாராணசியிலிருந்து பண்டிதர் கங்கா பட் அழைக்கப்பட்டிருந்தார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பண்டிதர் லஷ்மிகாந்தின் மகனான சுனில் லஷ்மிகாந்த் தீட்சித் கூறும்போது, “வாராணசியின் ராம்காட்டில் சுமார் நூறு வருடப் பழமையான வல்லப்ராம் சாலிகிராம் சாங்கவேத வித்யாலயா எனும் வேத பாடசாலையில் மாணவர்களுக்கு எனது தந்தை வேதங்கள் கற்றுத் தருகிறார். தென்னிந்தியா தவிர நாடு முழுவதிலும் பல முக்கிய பெரிய யாகங்கள், கோயில் பிரதிஷ்டைகள், லட்சதந்தி உள்ளிட்ட பல முக்கியப் புனிதப் பணிகளை நடத்தி வைத்தவர். ராமர் கோயிலின் பூமி பூஜையும் தந்தை லஷ்மிகாந்த் தீட்சித் தலைமையில் நடைபெற்றது. அயோத்தி கோயிலின் ராமர் சிலைக்கு பிராண் பிரதிஷ்ட சமாரோஹம் செய்வதும் எங்களது தீட்சித் குடும்பத்தின் முக்கிய பங்கேற்பாகக் கருதுகிறோம்” என்று தெரிவித்தார்.
இச்சிலையை அமைக்கும் பணியை ஏற்றுள்ள லஷ்மிகாந்த் தீட்சித்தின் கீழ், 150 பண்டிதர்கள் ஓதுவார்களாக இருப்பார்கள். இவர்கள் ஜனவரி 18 முதல் 22 வரை 5 நாட்களுக்கு, ராமர் சிலை அமைக்க வேதங்களை ஓதி பிரதிஷ்டையை முடிக்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT