Published : 21 Dec 2023 05:56 PM
Last Updated : 21 Dec 2023 05:56 PM
புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை ஒருநாள் முன்னதாக இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடர் டிசம்பர் 22-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் கீழே குதித்து தங்கள் கைகளில் இருந்த குப்பிகள் மூலம் மஞ்சள் நிற புகைகளைப் பரப்பினர். இந்தச் சம்பவம் மக்களவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியது.
நாடாளுமன்ற மக்களவையில் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 14-ம் தேதி முதல் தொடர் அமளியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வந்தன. மக்களவையில் பதாகைகளை ஏந்திய சபாநாயகரை முற்றுகையிட்டதால் கடந்த 14-ம் தேதி காங்கிரஸ், திமுக எம்.பிக்கள் உள்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.பிக்கள் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல், மாநிலங்களவையில் ஒரு எம்.பி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, கடந்த 18-ம் தேதி (திங்கள்கிழமை) அன்று நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவையைச் சேர்ந்த எம்.பிக்கள் 33 பேர் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாநிலங்களவையில் 45 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்தது.
இதன் தொடர்ச்சியாக, 19-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று நாடாளுமன்றம் கூடியதும் மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 49 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இன்றும் மக்களவையில் மூன்று எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், மொத்தம் 146 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிகளுக்கு இடையே பல்வேறு முக்கிய மசோதாக்களை அரசு நிறைவேற்றி உள்ளது. குறிப்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி, தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நியமனம் தொடர்பான மசோதா, தொலைத் தொடர்புத் துறை மசோதா, திருத்தப்பட்ட குற்றவியல் மசோதாக்கள் உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT