Published : 21 Dec 2023 05:03 PM
Last Updated : 21 Dec 2023 05:03 PM

மக்களவைத் தேர்தல் | பாஜக vs இண்டியா கூட்டணி: பிரசாந்த் கிஷோர் கணிப்பு என்ன?

புதுடெல்லி: அண்மையில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜக ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் என 3 மாநிலங்களில் வெற்றி பெற்ற நிலையில், இந்த வெற்றியால் மட்டுமே பாஜக மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் எனச் சொல்லிவிட முடியாது என்று கூறியுள்ளார் தேர்தல் உத்தியாளர் பிரசாந்த் கிஷோர். அதேவேளையில் இப்போதைய சூழலில், இண்டியா கூட்டணியைவிட வலுவான நிலையில் பாஜக இருக்கிறது என்றார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ஐந்து மாநிலத் தேர்தல் முடிவை நாம் ஓர் அரையிறுதி ஆட்ட வெற்றி என்று கூறிவிட முடியாது. ஆனால், இந்தத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜகவுக்குக் கிடைத்துள்ள வெற்றி நிச்சயமாக அக்கட்சிக்கு ஓர் உந்துதலைத் தரும். உளவியல் ரீதியான ஆதாயத்தையாவது ஏற்படுத்தித் தரும். 3 மாநிலத் தேர்தலில் பாஜக் - காங்கிரஸ் இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் குறைவு. இது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதாயமாகவும் மாறலாம், இல்லை பாஜகவுக்கான வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவும் செய்யலாம். இது எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அதனால், 3 மாநிலத் தேர்தல் வெற்றியால் பாஜக மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இந்தத் தேர்தலுக்கு முன்னதாகவே பாஜக மக்களவைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் எதிர்க்கட்சிகளைவிட வலுவான நிலையிலேயே இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.

இந்த 5 மாநிலத் தேர்தலுக்கு முன்னரே சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறாது என்பதே எனது கணிப்பாக இருந்தது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கான சாதகமான போக்கு தெளிவாகவே தெரிந்தது. சத்தீஸ்கரைப் பொறுத்தவரை பாஜக வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே நான் கணித்திருந்தேன். காரணம், அங்கே இருந்த எதிர்ப்பலை நிலவரம். தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை இருந்தது போலவே தான் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை இருந்தது.

இந்த மூன்று மாநிலத் தேர்தலும் பாஜகவுக்கு சாதகமானதன் பின்னணியில் பாஜக ஓர் அமைப்பாக தன்னை மாநிலங்களில் எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் சாரும். மத்தியப் பிரதேசத்தில் பாஜக 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவான அரசியல் கட்சியாக உள்ளது. அப்படியான நிலையில் அதை உடைக்க பழைய பிரச்சாரங்கள், பழைய பிரச்சினைகள், பழைய முகங்கள், பழைய உத்திகள் என்று காங்கிரஸ் எடுத்துச் சென்றதே தோல்விக்குக் காரணம். மக்களவைத் தேர்தலின்போதும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்கள் பாஜகவுக்கு சாதகமாகவே இருக்கும் என்பதை இதன் அடிப்படையில் ஊகிக்கலாம்.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இண்டியா கூட்டணி ஒற்றை முகத்தை அடையாளமாக முன்னிறுத்துவது என்பது தத்துவார்த்தமான யோசனையாக மட்டுமே இருக்க முடியும். இப்போதே இந்தி பேசும் மாநிலமாக இருக்கட்டும், இல்லை இன்னும் சில மாநிலங்களாக இருக்கட்டும், அதில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டிதான் இருக்கின்றன. அதனால் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் ஒரு வித்தியாசமான உத்தியுடன் களம் காண வேண்டும். அதை விடுத்து பாஜகவுக்கு எதிராக இண்டியா கூட்டணியின் சார்பில் காங்கிரஸில் இருந்து ஒற்றை முகத்தை அடையாளமாகக் கொண்டு செலுத்தினால் அது ஆட்டத்தை மாற்ற எதுவும் செய்யாது. இண்டியா கூட்டணியில் இருந்து கொண்டே காங்கிரஸ் ஒற்றைக் கட்சியாக வாக்குகளை அள்ளிக் குவித்தால் மட்டுமே எந்த ஒரு மாற்றமும் சாத்தியமாகும்.

இண்டியா கூட்டணி என்ற பெயர் அரசியல் களத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதை அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டு செல்ல காங்கிரஸும், கூட்டணிக் கட்சிகளும் தவறிவிட்டன. அதுபோல் கார்கேவை இண்டியா கூட்டணியின் பிரதமர் முகமாக அறிவிக்கலாம் என்ற யோசனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த யோசனையை மம்தா தான் முன்மொழிந்தார். காங்கிரஸ் கட்சி எதுவுமே சொல்லவில்லை. கார்கேவை ஒருவேளை பிரதமர் வேட்பாளர் முகமாக ஆதரித்தால் நிச்சயமாக அரசியலில் ஒரு சலசலப்பு ஏற்படும். அவர் ஒரு மூத்த தலைவர், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரும் கூட. ஆனால் அவர் தென்னிந்தியர். இந்தி பேசும் மாநிலங்களில் அவரை வைத்து காங்கிரஸ் எப்படி ஆதாயம் அடையும் என்பதையும் பார்க்க வேண்டும்.

இப்போதைக்கு மூன்று மாநிலத் தேர்தல் வெற்றி, அமைப்பு ரீதியாக மாநிலங்களில் பாஜகவின் வலிமை, பிரதமர் முகம் போன்றவற்றைக் கொண்டு பார்க்கும் போது பாஜக இண்டியா கூட்டணியைவிட வலுவான நிலையில் இருக்கிறது” என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x