Published : 21 Dec 2023 02:17 PM
Last Updated : 21 Dec 2023 02:17 PM
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் இருந்து 143 எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற பதாகை ஏந்தி எதிர்க்கட்சியினர் வியாழக்கிழமை பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து டெல்லியில் உள்ள விஜய் சவுக் வரை ஊர்வலமாக சென்றனர்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 13-ம் தேதி 2 பேர், பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து வண்ண புகை குப்பிகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல், மக்களவையில் இருந்து 97 எம்பிகள், மாநிலங்களவையில் இருந்து 46 எம்பிகள் என 143 பேர் மொத்தமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து மத்திய டெல்லியில் உள்ள விஜய் சவுக் வரை ‘ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அப்போது எம்.பி.,க்கள் கைகளில் ‘எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இடைநீக்கம். இது ஜனநாயகத்தின் முடிவா?’ ‘நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் கூண்டோடு வெளியேற்றம்’ என்ற பதாகைகளையும் கைகளில் வைத்திருந்தனர்.
இந்த ஊர்வலத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "நாங்கள் நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து கேள்வி எழுப்ப விரும்புகிறோம். மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவரிடம் நாங்கள் தொடர்ந்து பாதுகாப்பு அத்துமீறல் குறித்து பேச அனுமதிக்குமாறு தொடர்ந்து கோரி வருகிறோம். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் பாதுகாப்பு அத்துமீறல் குறித்து அவையில் பேசியிருக்க வேண்டும். (ஆனால்) பிரதமர் மோடி வேறு இடங்களில் பேசுகிறார் மக்களவை,மாநிலங்களவையில் பேசவில்லை. இது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறிய செயல்" என்று தெரிவித்தார்.
எம்பிகளின் இடைநீக்கத்தைத் எதிர்த்து வெள்ளிக்கிழமை ஜந்தர்மந்தரிலும், நாடுதழுவிய அளவிலும் போராட்டம் நடத்த இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசின் செயல் ஜனநாயகத்தின் படுகொலை என்றும், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினர்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியுள்ள மக்களவை அத்துமீறல் விவாகரத்துடன் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கரைப் போல திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. நடித்துக்காட்டிய விவகாரமும் தற்போது இணைந்துள்ளது.
மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்பு இதுவரை 141 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் டிச.19 போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின் போது திரிணமூல் காங்கிரஸின் எம்.பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின்போது செய்வதைப் போல நடித்துக் காட்டினார். அப்போது, ராகுல் காந்தி, அதை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். ஜகதீப் தன்கரை போல திரிணமூல் காங்கிரஸ் எம்.பி நடித்துக் காட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இதுகுறித்து திரிணமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி மன்னிப்பு கேட்ட நிலையில், இது குடியரசுத் துணைத் தலைவரை அவமதிக்கும் செயல் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சி, ஒட்டுமொத்த மோடி சூழல் தற்போது பானர்ஜி விவகாரத்தை தூக்கிப்பிடிக்க தொடங்கியுள்ளன. ஆனால் அத்துமீறலில் ஈடுபட்டவர்களை உள்ளே வர பாஸ் வழங்கிய பிரதாப் சிம்ஹா இன்னும் நாடாளுமன்றத்தில் எம்பியாக இருக்கிறார். அவர் இன்னும் விசாரிக்கப்படவில்லை என்று கூறியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT