Published : 21 Dec 2023 11:33 AM
Last Updated : 21 Dec 2023 11:33 AM

இந்தியாவில் அதிகரிக்கும் ஜேஎன்.1 பாதிப்பு; 2,669 பேருக்கு கரோனா சிகிச்சை - உஷார் நிலையில் மாநிலங்கள்

புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 358 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,669 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறையின் தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால், கேரளாவில் 3 பேர், கர்நாடகாவில் 2 பேர், பஞ்சாப்பில் 1 என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, இதுவரை தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,33,327 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் சதவீதம் 98.81 ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜேஎன்.1 வகை கரோனா தொற்று கடந்த சிலநாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் மகாராஷ்டிராவில் ஒருவரிடமும் கோவாவில் 19 பேரிடமும் கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று பரவுவதற்கு புதிய ஜேஎன்.1 வகை திரிபே காரணமாக கூறப்படுகிறது.

சுகாதாரத்துறை கூட்டம்: கரோனா தொற்று மீண்டும் பரவி வருவதை கருத்தில்கொண்டு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக்மாண்டவியா தலைமையில் டெல்லியில் புதன்கிழமை உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் மாண்டவியா கூறுகையில், "மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆனால் பீதியடையத் தேவையில்லை. நமது தயார்நிலையில் எவ்வித தளர்வும் இல்லை. பொது சுகாதாரம் என்று வரும்போது எவ்வித அரசியலுக்கும் இடமில்லை. கரோனா தொற்றால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு முழு உதவிகள் அளிக்கும். பாதிக்கப்பட்ட மாநிலங்கள் தயார்நிலையை உறுதி செய்ய ஒவ்வொரு மருத்துவமனையிலும் 3 மாதத்துக்கு ஒரு முறை கரோனா தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், ஜெஎன்.1 புதிய வகை வைரஸால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் அச்சப்படத் தேவையில்லை என்று நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் புதன்கிழமை தெரிவித்தார். மேலும் அவர், "புதிய பாதிப்புக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் சிகிச்சைகளே போதுமானது. இந்த பாதிப்பு மென்மையானதே. அதே நேரத்தில் அனைத்து வைரஸ்களும் மாறுபாடு அடைகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள அறிவியல் அமைப்புகள் புதிய மாறுபாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மாநிலங்கள் சோதனைகளையும் கண்காணிப்பையும் அதிகரிக்க வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 91 முதல் 92 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வரவே விரும்புகின்றனர்" என்று தெரிவித்தார்.

புதிய கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்கள் முழு அளவில் தயாராகி வருகின்றன. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, இன்ப்ளூயன்சா நோய் மற்றும் சுவாச தொற்று நோய்களுக்கான சோதனைகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று மேற்கு வங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் பாடீல், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அச்சப்படத் தேவையில்லை என்று வலியுறுத்தினார். மேலும் மாநிலத்தில் 13 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர், சவுரப் பரத்வாஜ்,"இந்த சிக்கலை சமாளிக்க நிர்வாகம் முற்றிலும் தயார் நிலையில் உள்ளது. வைரஸ் மாறுபாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள் மற்றும் பிற தேவைகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன என்று புதன்கிழமை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x