Published : 21 Dec 2023 07:21 AM
Last Updated : 21 Dec 2023 07:21 AM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்களின் மனதை அறிவதற்காக நமோ செயலி மூலம் பாஜக கணக்கெடுப்பு நடத்த உள்ளது. இதன் மூலம் மக்களின் குறைகளை களைய மத்திய அரசும் தயாராகி வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகக் கருதப்படுகிறது. இதில், முக்கிய மூன்று மாநிலங்களாக மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக வென்றுள்ளது. இதனால், இதே வேகத்தில் மக்களவைத் தேர்தலையும் சந்தித்தால், வெற்றிபெறுவது எளிது என பாஜககருதுகிறது. இதில், பொதுமக்களின் மனதை அறிய ஏற்கெனவே உள்ள நமோ செயலியை பாஜகபயன்படுத்த உள்ளது. இதன்மூலம், ‘ஜன் மன் சர்வே (மக்கள் மனதின் கணக்கெடுப்பு)’ எனும் கணக்கெடுப்பு நடத்த உள்ளது.
“நமோ செயலியை பயன்படுத்தி இந்தியாவை மாற்றி அமைக்கலாம், வாருங்கள்” என நமோ செயலியின் ஒருங்கிணைப்பாளர் குல்ஜித் சஹால் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த செயலியில் மத்திய அரசு பற்றிய பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு பொதுமக்களிடம் அதற்கான விடைகள் கேட்கப்பட உள்ளன. இத்துடன், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடும் வசதியும் இதில் செய்யப்படுகிறது. இதில் பதிவாகும் புகார்களை மத்திய அரசு உடனுக்குடன் சரிசெய்து, மக்கள் மனதை வெல்ல பாஜக தயாராகிறது.
பிரதமர் நரேந்திர மோடி பெயரிலான நமோ செயலி, கடந்த 2015-ல் அறிமுகமானது. இந்த செயலியில் பிரதமர் மோடியின் அன்றாட நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள், படக்காட்சிகளுடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ வானொலி உரைகளையும் இதில் கேட்க முடியும்.
நாடு முழுவதிலும் உள்ள தனதுகட்சி எம்பிக்களின் செயல்பாடுகள் குறித்தும் இந்த கணக்கெடுப்பில் பாஜக கருத்து கேட்க உள்ளது. இதன் அடிப்படையில் எம்.பி.க்களுக்கு மறுவாய்ப்பு அளிப்பது குறித்து பாஜக யோசிக்கும் என தகவல்கள் வெளியாகின்றன.
பொதுமக்களிடம் இதுபோல் கருத்து கேட்க தனியார் நிறுவனங்களையே அரசியல் கட்சிகள் நாடி வருகின்றன. இந்த வழக்கத்தை மாற்றி பாஜக இம்முறை நேரடியாக பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது. இந்த செயலியை மேலும் பல லட்சம் மக்கள் தங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்ய பல்வேறு பரிசுத் திட்டங்களை அமலாக்கும் யோசனையும் பாஜகவிடம் உள்ளதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT