Published : 21 Jan 2018 08:22 AM
Last Updated : 21 Jan 2018 08:22 AM
மாநில உரிமையை எக்காரணம்கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திட்டவட்டமாகக் கூறினார்.
ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், தோழமை கட்சியான பாஜவுக்கும் இடையே, போலாவரம் அணைக்கட்டு, மாநில சிறப்பு அந்தஸ்து, சிறப்பு நிதி ஒதுக்கீடு, புதிய தலைநகருக்கு தேவையான நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்களில் பனிப்போர் நிலவி வருகிறது.
இதுதொடர்பாக அமராவதியில் நேற்று நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசும்போது, “மாநில பிரிவின் போது கொடுத்த வாக்குறுதிகள் குறித்து சமீபத்தில் கூட பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். அவரும் சாதகமாக பேசினார். ஆனால் 2 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் பேசியபோது, நான் பாஜவை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வந்தன.
இதுபோல செய்திகளை திரித்து கூறுவது சரியல்ல. மாநில பிரிவினையின் போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றாவிடில் கடைசி அஸ்திரமாக மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவேன். மாநில உரிமைகளை எக்காரணத்தை கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT