Published : 30 Jan 2018 10:54 AM
Last Updated : 30 Jan 2018 10:54 AM
க
டந்த 2006, 2011-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா பங்கேற்கும் மூன்றாவது டாவோஸ் உலக பொருளாதார அமைப்பின் மாநாடு இது. மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால், இந்த டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 1997-ல் நடந்த மாநாட்டில் அப்போது பிரதமராக இருந்த தேவே கவுடா பங்கேற்றார். அப்போது அது பெரிய விஷயமாகப் பேசப்படவில்லை. இப்போது அப்படி இல்லை. மோடிக்கு நாடாளுமன்றத்தில் பலத்த பெரும்பான்மை இருக்கிறது. மொத்தம் 19 மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆள்கிறது. காங்கிரஸில் இந்திரா காந்தி எப்படியோ, அப்படி தனது கட்சியை கட்டுக்குள் வைத்திருக்கிறார்.
உலகப் பொருளாதார அமைப்புக்கும் அதன் நிறுவனர் கிளாஸ் ஸ்வைப்புக்கும் மோடி பங்கேற்றது ஒருவகையில் சாதனைதான். இதற்கு ஒரு பின்னணி கதை இருக்கிறது. குஜராத் முதல்வராக இருந்தபோதே, உலகப் பொருளாதார அமைப்புடன் மோடிக்கு தொடர்பு உண்டு. 2007-ல் டாலியனில் நடந்த கோடைகால மாநாட்டில் மோடி பங்கேற்றார். அப்போது உள்ளூர் அரசியல் பற்றி பலரும் கேள்வி மேல் கேள்வி கேட்டபோது, தான் அரசியல் பேச வரவில்லை.. உள்ளூர் பிரச்சினை குறித்து பேசப் போவதில்லை என்றும் தெரிவித்தார். அது எல்லோருக்கும் பிடித்திருந்தது.
இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு காரணமாக, உலக அளவில் நடக்கும் தொழில் மாநாட்டில் மோடிக்கு அழைப்பு அனுப்ப எல்லா அமைப்புகளும் விரும்பின. ஆனால், மோடியை அழைப்பதை தாங்கள் விரும்பவில்லை என அப்போதைய ஆட்சியாளர்களான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உலக பொருளாதர அமைப்பிடம் தெரிவித்தது. இதனால், மோடிக்கு அழைப்பில்லாமல் போனது. அதனால்தான் ஆட்சிக்கு வந்த பிறகும் கடந்த 3 ஆண்டுகளாக டாவோஸ் பற்றி கண்டு கொள்ளவில்லை.
பரிகாரம் தேடும் வகையில் பல வழிகளில் இறங்கி வந்தது டபிள்யூஇஎப். ஆரம்ப உரை நிகழ்த்தும் வாய்ப்பை அளித்தது. கடந்த ஆண்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடக்க உரை நிகழ்த்தினார். இந்த முறை ஏகப்பட்ட போட்டி. ட்ரம்ப், மேக்ரான், ட்ரூடோ, தெரசா மே, நெதன்யாகு, ஏஞ்சலா மெர்க்கல் என பல தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். இருந்தும் மோடிக்குதான் வாய்ப்பு கிடைத்தது.
மோடியின் பேச்சை கேட்க ஹால் நிரம்பி வழிந்தது. அடுத்து வந்த 4 நாட்களும் ஒவ்வொரு இந்தியரும் சந்திக்கும்போதெல்லாம், மோடி பேச்சு பற்றி என்ன நினைக்கிறீர்கள் என பேசிக் கொண்டனர். `சூப்பர்ல..’ என சிலாகித்துக் கொண்டனர். இங்குதான் ட்விஸ்ட் ஆரம்பம். ஆனால் இந்தியர்களைத் தவிர வேறு யாருமே இதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை.
மேற்கு நாடுகளுக்கு மிகப் பெரிய வர்த்தக நாடாக வளர்ந்து வரும் சீனாவை பிடிக்கவில்லை. இந்தியா அதேபோல் வளர வேண்டும், தங்கள் முதலீடுகளுக்கு ஏற்ற நாடாக மாற வேண்டும் என விரும்புகின்றன. சீனாவில் மூக்குடைபட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளன. அதே நேரம் வாக்குறுதிகள் மட்டும்தான் பெரிதாக இருக்கின்றன என்ற வருத்தமும் இருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்ததும் பெரிய அளவில் சீர்திருத்தங்களையும் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் அவை எதிர்பார்த்தன.
என்னதான் சொல்ல வரும் தகவல் நல்லதாக இருந்தாலும் சொல்பவர் மோடியாக இருந்தாலும் பொருள் சிறந்ததாய் இருந்தால்தான் விற்க முடியும். 7 சதவீத வளர்ச்சி என்பது நல்ல விஷயம்தான். ஆனால், மக்கள் தொகை சம அளவில் இருந்தாலும் சீனாவின் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது. அதில் ஐந்தில் ஒரு பங்குதான் இருக்கிறது இந்தியாவின் பொருளாதாரம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 9 சதவீத வளர்ச்சி இருந்தது. ஐ.டி. நிறுவனங்கள் செழித்து வளர்ந்தன. பெங்களூரு இன்னொரு சிலிக்கான் வேலி போல், அவுட்சோர்ஸிங் தொழிலில் வளர்ந்தது. நியமன பிரதமராக இருந்தாலும் மோடியைப் போல் சிறந்த பேச்சாளராக இல்லாவிட்டாலும் மன்மோகன் சிங் எப்படியோ சமாளித்தார்.
உலகத் தலைவர்களுக்கு இணையான தலைவர் இப்போது நம்மிடம் இருக்கிறார். எதை, எங்கு, எப்படி பேசலாம் எனத் தெரிந்த தலைவர் இருக்கிறார். ஆனால் கைவசம் இருக்கும் சரக்கு சரியில்லை. கடந்த 2006 முதல் இதுவரை, உணவு, பாலிவுட், கலைப் பொருட்கள், ஆன்மீகம், யோகா போன்ற விஷயங்களில்தான் இந்தியா கவனத்தை ஈர்த்துள்ளது. மிகப் பெரிய வளர்ச்சியை விரும்பும் இந்தியாவுக்கு இது போதாது.
பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற ஆசைப்படும் இந்தியா தனது முழு சக்தியை வெளிப்படுத்தும் வகையில் செயலாற்ற வேண்டும் என உலக நாடுகள் விரும்புகின்றன. டாவோஸ் போன்ற உலக நாடுகள் பங்கேற்கும் அரங்கில் சர்வதேச பிரச்சினைகளை ஆணித்தரமாக ஏன் பேசுவதில்லை என நினைக்கின்றன. சுதந்திரமான கடல்வழி போக்குவரத்து, பிராந்திய உரிமைகள், உலக நீதி குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தால் அது தலைப்புச் செய்தியாகி இருக்கும் என நினைக்கின்றன.
இதே வாரத்தில் ஆசியான் அமைப்பின் 10 தலைவர்களை தனது குடியரசுத் தின விழாவுக்கு அழைத்து வந்து பலத்தையும் காட்டியுள்ளது இந்தியா. 10 நாட்டுத் தலைவர்களையும் ஒரே நேரத்தில் விழா மேடையில் நிறுத்தியது அருமையான யோசனை. மிகப் பெரிய சாதனை. வலுவான எச்சரிக்கை. டாவோஸுடன் குடியரசுத் தின ராஜ தந்திரத்தையும் இணைத்திருக்கலாம். ஆனால் இந்தியா தவறி விட்டது.
பொருளாதாரத்தைப் பொருத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில் வாக்குக் கொடுத்தபடி இந்தியா செயல்படவில்லை என பலர் நினைக்கலாம். இப்போதும் இந்தியா அதைத்தான் செய்திருக்கிறது. அதன் பலத்துக்கு ஏற்றபடி செயல்படவில்லை. டாவோஸ் தேர்வில் தேறவில்லை. இந்தியா நடத்திய கருத்தரங்குகளில் எப்போதும்போல இந்தியர்களைத்தான் பார்க்க முடிந்தது. எப்போது, இந்தியாவின் கருத்தைக் கேட்க, வெளிநாட்டவர்களும் வருகிறார்களோ, அதுவரை இந்தியா உலக அளவில் பேசப்படப் போவதில்லை. அதுவரை நாமே நம்மை பாராட்டிக் கொள்ள வேண்டியதுதான்.
தமிழில்: எஸ். ரவீந்திரன்
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,
முதன்மை ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT