Published : 27 Jan 2018 06:50 PM
Last Updated : 27 Jan 2018 06:50 PM
கர்நாடக மாநில அரசியலில் புயலைக் கிளப்பிய திப்பு சுல்தான் விவகாரம் இப்போது டெல்லி மாநிலத்துக்கும் வந்துவிட்டது.
கர்நாடக மாநிலத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாடுவதில் மாநில அரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை நீடித்தது. இதனால், மாநில அரசியலில் பெரிய சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாநிலத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட பா.ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல இடங்களில் போராட்டமும் நடத்தப்பட்டு, அடி, தடி கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக, தேர்தல் நேரத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைக் கவர காங்கிரஸ் கட்சியும், முதல்வர் சித்தராமையும் முயற்சிக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டியது.
இதற்கு மாநில அரசு சார்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் ஓரளவுக்கு ஓய்ந்து அங்கு இப்போது அமைதி திரும்பி வருகிறது.
இந்நிலையில், திப்பு சுல்தான் விவகாரம் இப்போது டெல்லி அரசியலுக்கு நகர்ந்திருக்கிறது. குடியரசு தினமான நேற்று டெல்லி சட்டசபையில் சுதந்திரப் போராட்ட தலைவர்கள், புரட்சியாளர்கள், மக்களின் நாயகர்கள் என 70 பேரின் புகைப்படங்களை முதல்வர் கேஜ்ரிவால் திறந்து வைத்தார். இதில் அஷாபுல்லா கான், பகத் சிங், பிர்ஸா முன்டா, சுபாஷ் சந்திர போஸ், மைசூர் மன்னர் திப்பு சுல்தான் உள்ளிட்ட பல தலைவர்கள் புகைப்படங்கள் திறந்து வைக்கப்பட்டன.
அந்த தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களுக்கு இடையே திப்பு சுல்தான் படம் இருப்பதைக் கண்டு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
டெல்லி சட்டசபையில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய மனிதர்களின் புகைப்படங்கள் வைக்கக் கூடாது என்று பாஜகவினர் தெரிவித்ததால் அங்கு சலசலப்பு உருவானது. ஆனால், அதையும் மீறி அங்கு திப்பு சுல்தான் படம் திறக்கப்பட்டது.
இது குறித்து பாஜக எம்.எல்.ஏ. ஓம் பிரகாஷ் சர்மா நிருபர்களிடம் கூறுகையில், ''பகத் சிங் நம் நாட்டின் கவுரவம். ஆனால், நாம் திப்பு சுல்தானை கவுரவப்படுத்தினால், அது நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்காது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய மனிதர்களின் புகைப்படங்களை சட்டசபையில் வைக்கும் போது,மக்களின் மனதையும், உணர்வுகளையும் புண்படுத்துவது போலாகும்'' எனத் தெரிவித்தார்.
மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் குறித்து பாஜக தலைவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது முதல்முறை அல்ல. இதற்குமுன் பாஜக மூத்த தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கூட கடுமையாகப் பேசி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT