Published : 20 Dec 2023 06:38 PM
Last Updated : 20 Dec 2023 06:38 PM

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் மூன்றும் மக்களவையில் நிறைவேற்றம்

புதுடெல்லி: திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் புதன்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சி எம்.பிக்களே அவையில் அதிக அளவில் இருந்த நிலையில், இந்த மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து அமலில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா ஆகிய மூன்று திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற நிலைக் குழுவின் (உள்துறை) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.

இக்குழு, சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை கடந்த மாதம் சமர்ப்பித்தது. இந்த பரிந்துரை அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பெருமளவிலான எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சி எம்.பிக்களே அவையில் அதிக அளவில் இருந்தனர். இந்த மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தற்போதுள்ள இந்திய குற்றவியல் சட்டங்களின் நோக்கம் தண்டிப்பதுதானே தவிர, நியாயம் வழங்குவது அல்ல. புதிய மசோதாக்கள் சட்டமாகும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும். தற்போதைய சட்டங்களைக் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், இந்தியாவை தங்கள் காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டவை. புதிய சட்டங்களைப் பொறுத்தவரை அவை தண்டனை வழங்குவதைவிட, நியாயம் வழங்குவதாக இருக்கும்” என கூறினார்.

முன்னதாக, அவையில் பதாகைகளைக் காண்பித்து அமளியில் ஈடுபட்ட சி. தாமஸ், ஏ.எம். ஆரிப் ஆகிய எம்.பிக்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தீர்மானம் கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

முக்கிய அம்சங்கள்: இந்த திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறவும், அதற்கு மாற்றாக அமல்படுத்தவும் வகை செய்கின்றன. ஐபிசி-க்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பாரதிய நியாய (2-வது) சன்ஹிதா மசோதாவில், கும்பலாக சேர்ந்து கொலை செய்வோருக்கு குறைந்தபட்சம் ஆயுள் அதிகபட்சம் மரண தண்டனை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுபோல் ஒவ்வொரு சட்டத்திலும் குற்றங்களுக்கு தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. முழுமையாக வாசிக்க > திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள்: மாறியது என்ன, ஏன்? - ஒரு விரைவுப் பார்வை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x