Published : 20 Dec 2023 11:04 AM
Last Updated : 20 Dec 2023 11:04 AM
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் தனக்கு நேர்ந்த அவமதிப்பு குறித்து பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் கேட்டு வருந்தியதாக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று (டிச.19) திரிணமூல் காங்கிரஸின் எம்.பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின்போது செய்வதை போல நடித்துக் (மிமிக்ரி) காட்டி கேலி செய்தார். அப்போது அதனை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வீடியோவாகப் பதிவு செய்தார். இவை சர்ச்சையான நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்ததாக தன்கர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தன்கர் எக்ஸ் பக்கத்தில், “சில மாண்புமிகு உறுப்பினர்கள் அரங்கேற்றிய மோசமான நாடகம் குறித்தும், அது மாட்சிமை பொருந்திய நாடாளுமன்ற வளாகத்திலேயே அரங்கேற்றப்பட்டது குறித்தும் மிகுந்த வலியடைந்ததாக பிரதமர் மோடி என்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். இதுபோன்ற சிறுமைகளை 20 வருடங்களாக தான் அனுபவித்து வருவதாகக் கூறினார். ஆனால், அரசியலமைப்புப் பதவியில் உள்ளவருக்கு, அதுவும் குடியரசு துணைத் தலைவருக்கே, நாடாளுமன்ற வளாகத்திலேயே அத்தகைய சம்பவம் நடந்தது துரதிர்ஷடவசமானது என்று பிரதமர் கூறினார்” எனப் பதிவிட்டுள்ளார்.
மக்களவை அத்துமீறல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட சில மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்பு இதுவரை 141 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT