Published : 01 Jan 2018 09:48 AM
Last Updated : 01 Jan 2018 09:48 AM
தமிழில் செம்பருத்தி படத்தில் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் 100 படங்களுக்கும் மேல் நடித்து புகழ்பெற்றவர் ரோஜா. இப்போது ஆந்திர அரசியலில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கே சவால் விடும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார். அரசியலில் இவர் பட்ட இன்னல்கள் பல. ஆயினும் மனம் தளராது பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அரசியல், சினிமா, சின்னத்திரை, குடும்பம் என பன்முகங்களோடு வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்தி வருகிறார். தமிழகத்தின் மருமகளான ரோஜா, ரஜினியின் அரசியல் பிரவேசம், மனிதாபிமானம், கடின உழைப்பு, தற்போதைய தமிழக அரசியல் நிலை குறித்து ‘தி இந்து’ வுக்கு அளித்த பேட்டி:
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து...
ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என நான் உட்பட தமிழக மக்கள் அனைவரும் பல ஆண்டுகளாக ஆவலுடன் காத்திருந்தோம். சரியான நேரத்தில், சரியான முடிவை எடுத்துள்ளார்.
அரசியலில் சாதிப்பாரா ?
ரஜினிகாந்துடன் 2 படங்களில் நடித்துள்ளேன். ஒளிவு மறைவின்றி பேசுவதே அவரது பலம். இது அரசியலுக்கு ஒத்துவராது என்பது உண்மை. தமிழக அரசியல் மட்டுமல்ல, அனைத்து மாநில அரசியல், தேசிய அரசியலும் ரஜினிக்கு தெரியும். அவருக்கு ‘பாலிடிக்ஸ்’ தெரியும். ஆனால் பாலி ‘டிரிக்ஸ்’ தெரியாது. இதை அவரே போகப்போக கற்றுக்கொள்வார் அல்லது மற்றவர்கள் கற்றுக் கொடுத்து விடுவார்கள். அரசியலில் அவர் சாதிப்பார்.
ரஜினியின் பலம், பலவீனம்...
ரஜினியின் பலமே அவரது நல்ல எண்ணங்கள்தான். இப்போதைய கதாநாயகர்களில் ரஜினிக்குத்தான் அதிகமான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இதுவும் அவரது பலம்தான். சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து மிகவும் கஷ்டப்பட்டு, மாநிலம் விட்டு மாநிலம் வந்து, திரையுலகில் படிப்படியாக உயர்ந்து, இந்திய அளவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் ரஜினி. அவர் திரையுலக பிரவேசத்தின்போது, கதாநாயகர்கள் சிவப்பாக, உயரமாக , அழகாக, கட்டுடலுடன் இருத்தல் அவசியம். ஆனால் அந்த மரபை உடைத்தெறிந்தவர் ரஜினி. இவரைத் தொடர்ந்து இவரைப்போல் சாதாரண உருவம் கொண்டவர்களும் திரைப்படங்களில் வரத்தொடங்கினர். அதற்கு முதலில் ரஜினியை பாராட்டியே ஆக வேண்டும். அவரது பலவீனம் என்று ஒன்றும் இல்லை. அனைவரிடமும் அன்பாக பழகுவார். சாதி, மதம் பார்க்க மாட்டார். சூப்பர் ஸ்டார் என்கிற பந்தா அவரிடம் எப்போதும் இருந்தது கிடையாது.
திரையுலகினர் அரசியலில் குதித்தால் மக்கள் ஏற்பார்களா?
எல்லா அரசியல்வாதிகளையும் கெட்டவர்கள் என கூற முடியாது. இப்போதைய சூழலில் மக்கள் அரசியல்வாதிகளை நம்புவது கடினம். அவர்கள் திறம்பட ஆட்சி புரிந்தால் அவர்கள் வாழும் வரை மக்கள் அவர்களை புறக்கணிக்க மாட்டார்கள். இதற்கு எம்ஜிஆர், என்டிஆர் ஆகியோரே உதாரணம். திரைத்துறை மக்களோடு பின்னிப் பிணைந்துள்ளது. தன்னை இந்த சமூகத்தில் உயர்த்திய மக்களுக்காக நடிகர்கள் சேவை செய்ய முன்வருவதில் எந்த தவறும் கிடையாது.
ரஜினி தமிழர் அல்ல. இதனை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா ?
தமிழக மக்கள் வந்தாரை வாழ வைப்பவர்கள். அவ்வளவு ஏன் நான், குஷ்பு, தேவயானி உட்பட பல நடிகை, நடிகர்கள்கூட வெளி மாநிலத்தவர்கள்தான். நாங்கள் எல்லாம் இப்போது தமிழகத்தின் மருமகள்களாக வாழ்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய மாநிலம், சாதி, மதம் தேவையில்லை. நல்ல மனம் இருந்தால் போதும். அது ரஜினியிடம் நிறையவே இருக்கிறது. கண்டிப்பாக அவர் தமிழக மக்களுக்கு நன்மை செய்வார்.
சிரஞ்சீவி கட்சி தொடங்கி அதை கலைத்துவிட்டாரே...
சிரஞ்சீவி ஆந்திராவில் அரசியல் கட்சியை தொடங்கியபோது இருந்த சூழ்நிலை வேறு. அப்போது ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஆட்சி புரிந்தார். பலமான எதிர்க்கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு இருந்தார். இவர்களை எதிர்த்து அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. ஆனால் ரஜினியின் நிலை வேறு. தமிழகத்தின் இப்போதைய அரசியல் சூழல் வேறு.
நான் அரசியல் ஆசானாக நினைக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர், தமிழகத்தில் அரசியல் நிலை மாறிவிட்டது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் அரசியலை மக்கள் வெறுத்து வருகின்றனர். தமிழகத்தை கோலோச்சிய இரு மாபெரும் திராவிட இயக்கங்களின் தலைவர்கள் இடங்கள் தற்போது வெற்றிடமாக உள்ளன. இதனை நிரப்ப ஒரு நல்ல மனிதர் தேவை. அது ரஜினிதான். தமிழக அரசியலுக்கு தற்போது புதிய, திறமை வாய்ந்த தலைமை தேவை. ரஜினி தன்னலமற்ற அரசியல் நடத்துவார் என எதிர்பார்க்கிறேன். அவரை வாழ வைத்த தமிழக மக்களுக்காக அவர் மனிதாபிமானத்துடன் சிறப்பாக ஆட்சி புரிவார் என்ற நம்பிக்கை உள்ளது. முதலில் அவர் மீது பலர் தங்களது வெறுப்புகளை வெளிக்காட்டலாம். அவரை அரசியலில் முழுமையாக இறங்கவிடாமல் தீவிர விமர்சனங்கள் செய்யலாம். இதனை அவர் சிறிதும் பொருட்படுத்த கூடாது. அதையெல்லாம் தாண்டி ரஜினி அரசியலில் சாதிக்க வேண்டும். அடுத்த தமிழக முதல்வராக ரஜினியை பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT