Published : 19 Dec 2023 07:01 PM
Last Updated : 19 Dec 2023 07:01 PM
புதுடெல்லி: மக்களவை அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் தர வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதற்காக நூற்றுக்கணக்கான எம்.பி.க்களை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது வரலாற்றுச் சம்பவமாக கருதப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை இந்தக் கூட்டத் தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி சசி தரூர், கார்த்தி சிதம்பரம், அதிர் ரஞ்சன் சவுத்ரி, கௌரவ் கோகோய், ஃபரூக் அப்துல்லா, என்சிபியின் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்ட 49 எம்.பி.க்களில் அடங்குவர்.
இதனிடையே, மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 22-ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக இண்டியா கூட்டணி அறிவித்துள்ளது. அதன் முழு விவரம் > எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்: இண்டியா கூட்டணி டிச.22-ல் நாடு தழுவிய போராட்டம் | இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதன் விவரம்:
காங்கிரஸ் எம்.பி சசி தரூர், “பாஜக-வினர் எதிர்க்கட்சிகள் (mukt-முக்ட்) இல்லாத மக்களவையை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது. மேலும், மாநிலங்களவையிலும் அவர்கள் அதையே செய்வார்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இரங்கல் எழுதத் தொடங்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா மீறியுள்ளார். அவைக்குள் இன்னும் பாதுகாப்பு மீறல் விவகாரம் குறித்து விவாதிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
எம்.பி பரூக் அப்துல்லா, “போலீஸ் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அவர் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? இந்தச் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்தாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "இது நாடாளுமன்றத்திற்குள் நடக்கும் அராஜகத்தைத் தவிர வேறில்லை. அவர்களுக்கு (பாஜக) நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு துளியும் நம்பிக்கை இல்லை" என்று காட்டமாக கூறினார்.
பகுஜன் சம்மாஜ் கட்சியைச் சேர்ந்த டேனிஷ் அலி, “நாடாளுமன்ற விதிமுறைகளை மீறியதால் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் கூறுவது விந்தையானது. அரசாங்கத்திடம் கேள்விகள் கேட்பது எப்படி நாடாளுமன்ற ஒழுங்குமுறையை மீறுவதாகும்? மக்களவையில் தாக்குதலை நடத்தியவர்கள் யாருடைய அனுமதிச்சீட்டின் பேரில் சபைக்குள் நுழைந்தார்களோ, அந்த பாஜக நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று விமர்சித்தார்.
ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சதா, "இது இந்திய ஜனநாயகத்தில் ஒரு கருப்பு நாள். ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது" என்றார். தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, “நாங்கள் நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து பதிலைதான் பெற விரும்பினோம். பாஜக எம்.பி.க்களும்தான் இருந்தனர். இது பாதுகாப்பு தொடர்பான விஷயம், ஆனால், அரசாங்கம் இது குறித்து விவாதிக்காமல் தப்பித்து ஓடுகிறது" என்று குற்றம்சாட்டினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பாதுகாப்பு அத்துமீறல் குறித்து விவாதிக்காமல் இருப்பது இரு அவைகளின் புனிதத்துக்கும், நற்பெயருக்குக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி.க்களை பாதுகாப்பதற்கு பதிலாக, மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை சபாநாயகரும் எம்.பி-க்களை இடைநீக்கம் செய்கிறார்கள்" என்றார்.
போராட்டமும் சாடலும்: முன்னதாக, இந்த இடைநீக்கத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது, எங்களை கூண்டில் அடைக்க முடியாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் கைகளில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது சரியல்ல. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கருத்துகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்கள். பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரில் ஒருவர், டிசம்பர் 13-ம் தேதி நடந்த நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், இருவருமே அவைக்கு வர மறுக்கிறார்கள். நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது அவர்கள் வாரணாசியிலும், அகமதாபாத்திலும் உரைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.
“ஜனநாயகம் என்றால் என்ன என்று தெரியாத ஒரு கட்சி நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கான திட்டமிட்ட தாக்குதல் இது. ஹிட்லரை உதாரணமாகக் கொண்டு அவர்கள் செயல்படுகிறார்கள். மக்களவைக்குள் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் வீசிய புகைக் குண்டுகள் விஷ வாயுக்களாக இருந்திருந்தால் அங்கு இருந்த உறுப்பினர்கள் அனைவரும் இறந்திருப்பார்கள். புதிய நாடாளுமன்றம் உச்சபட்ச பாதுகாப்பு கொண்டது என அவர்கள் கூறினார்கள். ஆனால், அதற்கு எதிராக நிலைமை உள்ளது” என காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திக் விஜய் சிங் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை அவர்கள் விரும்புகிறார்கள். இதை நோக்கியே அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி சொல்வது என்ன? - இதனிடையே, டெல்லியில் பாஜக நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஜனநாயகம் மற்றும் ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறலை கண்டித்திருக்க வேண்டும். ஒரு சில கட்சிகள், ஒரு வகையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றன. இது ஆபத்தான ஒன்று. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் இருக்கின்றன.
இந்த விரக்தியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சீர்குலைத்து அல்லது முடக்கி வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதோடு ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்றார். அதோடு, “நமது அரசை தூக்கி எறிவதே இண்டியா கூட்டணியின் குறிக்கோள். ஆனால் நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதே நமது அரசாங்கத்தின் குறிக்கோள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தப் போராட்டத்தின் போது திரிணமூல் காங்கிரஸின் எம்.பி கல்யாண பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின்போது செய்வதை போல நடித்துக் (மிமிக்ரி) காட்டினார். அப்போது, ராகுல் காந்தி, அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். ஜகதீப் தன்கரை போல திரிணமூல் காங்கிரஸ் எம்.பி நடித்துக் காட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதனை, குடியரசுத் துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் கடுமையாக கண்டித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT