Published : 19 Dec 2023 04:54 AM
Last Updated : 19 Dec 2023 04:54 AM
வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உலகின் மிகப்பெரிய தியான மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்றார். முதல் நாளில் காசி தமிழ் சங்கமத்தின் 2-ம் ஆண்டு நிகழ்ச்சியை நமோ படித்துறையில் தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
இந்நிலையில், 2-வது நாளான நேற்று யில் ‘ஸ்வர்வேத மஹாமந்திர்’ என்ற உலகின் மிகப்பெரிய தியான மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உடன் இருந்தார். பின்னர் இருவரும் தியான மண்டபத்தை சுற்றிப் பார்த்தனர். இந்த மண்டபத்தில் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் அமர்ந்து தியானம் செய்ய முடியும். மற்ற கோயில்கள்போல, இங்கு இறைவன் திருஉருவம் எதுவும் இருக்காது. முற்றிலும் தியானம் செய்வதற்காகவே இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறும்போது, ‘‘நம் நாட்டின் சமூக மற்றும்ஆன்மிக வலிமையின் நவீன அடையாளமாக ஸ்வர்வேத மகாமந்திர் விளங்கும். தெய்வீகத் தன்மை, கம்பீரத்துக்கு கவர்ச்சிகரமான எடுத்துக்காட்டாகவும் இது இருக்கும்’’ என்றார்.
பின்னர், வாரணாசி - டெல்லி இடையிலான 2-வது வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த ரயில், காலை 6 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்பட்டு மதியம் 2.05 மணிக்கு டெல்லி சென்றடையும். டெல்லியில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.05 மணிக்கு வாரணாசியை வந்தடையும். செவ்வாய்க்கிழமை தவிர அனைத்து வார நாட்களிலும் இந்த ரயில் இயங்கும்.
வாரணாசி - டெல்லி இடையிலான முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த ரயில் காலையில் டெல்லியில் இருந்து புறப்பட்டு மாலையில் வாரணாசி வந்தடையும். பின்னர், மாலையில் வாரணாசியில் புறப்பட்டு இரவில் டெல்லி சென்றடையும். வியாழக்கிழமை தவிர அனைத்து வார நாட்களிலும் இந்த ரயில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ரூ.10,903 கோடியில் ரயில் வழித்தடம்: இதுபோல, சந்தவுலி மாவட்டம் புதிய தீன்தயாள் உபாத்யாய் சந்திப்பு முதல் நியூ பாவ்பூர் சந்திப்பு வரை (402 கி.மீ.) நிறுவப்பட்டுள்ள கிழக்கு சரக்கு ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதியையும் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ரூ.10,903 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம், சந்தவுலி, மிர்சாபூர், பிரயாக்ராஜ், கவுஷாம்பி, பதேபூர், கான்பூர் நகர், கான்பூர் டேஹத் ஆகிய மாவட்டங்களை கடந்து செல்கிறது.
7 தளங்கள், 101 நீரூற்றுகள்: வாரணாசியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள உமராஹா பகுதியில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஸ்வர்வேத மஹாமந்திர் அமைந்துள்ளது. 7 தளங்கள் கொண்ட இந்த மண்டபம், 125 தாமரை இதழ் குவிமாடங்களுடன் அழகிய வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 20 ஆயிரம்பேர் இங்கு தியானம் செய்ய முடியும்.இந்த கோயிலில் 3,137 ஸ்வர்வேத ஸ்லோகங்கள் பளிங்கு கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. மூலிகைதோட்டமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. தேக்கு மர மேற்கூரைகள், நுணுக்கமான சிற்பங்கள் கொண்ட கதவுகள், 101 நீரூற்றுகள் இக்கோயிலில் உள்ளன.
இதன் கட்டுமானப் பணி கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 15 பொறியாளர்கள் மற்றும் 600 தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
‘விஹாங்கம் யோகா நிறுவனர் சதாபால் தியோஜி மகராஜால் எழுதப்பட்ட ஸ்வர்வேதத்துக்கு இந்த ஸ்வர்வேத கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது’ என்று கோயில் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மனிதகுலத்தை அதன் அற்புதமான ஆன்மிக ஒளியால் ஒளிரச் செய்வதோடு, உலகை அமைதியான விழிப்பு நிலையில் ஆழ்த்துவதாகும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT