Published : 19 Dec 2023 08:12 AM
Last Updated : 19 Dec 2023 08:12 AM
பாட்னா: பிஹாரின் தர்பங்கா பகுதியில் ஷியாமா மாய் கோயில் அமைந்துள்ளது. இந்த காளி கோயிலில் விலங்குகளை பலியிடக்கூடாது என்று பிஹார் அரசு அண்மையில் தடை விதித்தது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
இந்நிலையில், பிஹாரின் பெகுசாராய் எம்பியும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான கிரிராஜ் சிங், பிஹார் அரசின் தடை உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: விலங்குகளை நேசிப்பதாக கூறும் சிலர், இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடக் கூடாது என்று வாதிட்டு வருகின்றனர். முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையின்போது விலங்குகளை பலியிடக்கூடாது என்று அவர்கள் குரல் எழுப்பாதது ஏன்?
இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடுவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது. முஸ்லிம்கள் மத வழக்கத்தின்படி ஹலால் இறைச்சியை மட்டுமே சாப்பிடுகின்றனர். இதேபோல இந்துக்களும், ஜட்கா இறைச்சியை மட்டுமே சாப்பிட வேண்டும். இந்து மத தர்மத்தின்படி, கோயில்களில் விலங்குகளை பலி கொடுக்கும்போது ஒரே வெட்டில் கொன்றுவிட வேண்டும். இதுவே ஜட்கா இறைச்சி ஆகும். உலகில் பல்வேறு மதங்கள் உள்ளன. இதில் இந்து மதத்தைவிட சிறந்த மதம் கிடையாது. இவ்வாறு அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
ஜட்கா இறைச்சி? முஸ்லிம்களின் ஹலால் நடைமுறையின்படி ஒரு விலங்கின் முன்னங்கழுத்தின் ரத்த நாளங்களை சிறிதாக அறுத்து அதன் ரத்தத்தை முழுமையாக வடியச் செய்து உயிரிழக்கச் செய்கின்றனர். இந்து கோயில்களில் பலி கொடுக்கும்போது ஒரே வெட்டில் விலங்கை கொன்றுவிட வேண்டும். அதாவது வலி தெரிவதற்கு முன்பே விலங்கு உயிரிழந்துவிடும். ஓங்கி வெட்டும்போது தண்டுவடம் அறுபடும் வகையில் பின்னங்கழுத்தில் வெட்டுவதால் உடனடியாக மரணம் ஏற்படும். இந்த முறைக்குஜட்கா என்று பெயர். இந்துக்களின் நடைமுறையைப் பின்பற்றி ஜட்காஇறைச்சியை மட்டுமே சாப்பிடவேண்டும் என்று சீக்கிய குருகோவிந்த் சிங் அறிவுறுத்தி உள்ளார். அதை பின்பற்றி பஞ்சாபில்பெரும்பாலான இறைச்சி கடைகளில் ஜட்கா இறைச்சி மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT