Published : 18 Dec 2023 07:38 AM
Last Updated : 18 Dec 2023 07:38 AM

டெல்லி மெட்ரோ ரயில் கதவில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்லி இந்தர்லோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 1.04 மணிக்கு ரயிலுக்காக ரீனா (35) என்ற பெண் காத்திருந்தார். அங்கு வந்த மெட்ரோ ரயிலில் ஒரு பெட்டியில் ரீனா ஏறினார். அதே வேகத்தில் திடீரென வெளியே வந்தார். அதற்குள் ரயில் பெட்டியின் கதவு மூடிக் கொண்டது. அதில் ரீனாவின் சேலை சிக்கிக் கொண்டது.

சில விநாடிகளில் ரயில் புறப்பட்டது. ரயில் மற்றும் நடைமேடையில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். அதற்குள் ரயில்வேகமெடுக்க கதவில் சேலை சிக்கிய நிலையில், ரீனா நடைமேடையில் பல மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டார். கடைசியில் நடைமேடையை தாண்டி ரயில் சென்ற பிறகு பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் ரீனா வீசப்பட்டார்.

உடனடியாக அவரை மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த ரீனா, கடந்த சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தார். இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்புக்கான ஆணையர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், ரீனா ரயில் பெட்டிகள் ஏறுவதும் சில விநாடிகளில் திடீரென நடைமேடையில் இறங்கி,அங்கு நின்றிருந்த தனது குழந்தையை அழைக்க சென்றதும் பதிவாகி உள்ளது. அப்போதுதான் அவரது சேலை கதவில் சிக்கியுள்ளது. இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, ‘‘படுகாயம்அடைந்த ரீனாவை முதலில் ஆம்புலன்ஸில் ஏற்றி தீப் சந்த் பந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செயற்கை சுவாச வசதி வென்டிலேட்டர் இல்லை என்று கூறி சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். ராம் மனோகர் லோகியா, லோக் நாயக் மருத்துவமனைகளிலும் ரீனாவுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். கடைசியில் சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து சப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது,‘‘ரீனாவின் தலை மற்றும் மார்பக பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அத்துடன் அவரது வலதுதாடைப் பக்கம் பலத்த சேதம் இருந்தது. அவர் சுயநினைவின்றி இருந்தார். அவரது நிலைமை அப்போதே மிகவும் மோசமாக இருந்தது. விபத்தின் போது அவரது தலை பகுதி மோதியதில் மூளைக்குள் இருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளது (டிஃபியூஸ்டு ஆக்ஸனல் இன்ஜுரி). மேலும், நுரையீரலுக்கு வெளியிலும் ரத்தம் கசிந்துள்ளது. அதனால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தார்’’ என்று விளக்கம் அளித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், ‘‘ரீனாவின் கணவர் கடந்த 2014-ம் ஆண்டு இறந்துவிட்டார். அவர்களுக்கு 12 வயது பெண் ரியா, 10 வயது மகன் ஹிடன் ஆகியோர் உள்ளனர். காய்கறிகள் விற்று குழந்தைகளைக் காப்பாற்றி வந்தார் ரீனா. இப்போது அந்த குழந்தைகளை யார் கவனித்துக் கொள்வார்கள். எனவே, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம், அவர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

சேலை சிக்கிய பிறகும் மெட்ரோ ரயில் கதவு திறக்காதது ஏன்? டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வட்டாரங்கள் கூறியதாவது: கதவில் சேலை சிக்கிய பிறகு, மெட்ரோ ரயில் பெட்டியின் கதவு ஏன் திறக்கவில்லை என்பது, முழு விசாரணைக்குப் பிறகே தெரிய வரும். வழக்கமாக ரயில் பெட்டி கதவு மூடும் போது ஏதாவது இடையூறு ஏற்பட்டால், பாதுகாப்பு வசதி உடனடியாக செயல்பட்டு கதவு திறக்கும். கதவு தானாகவே திறந்து மீண்டும் மூடுவதற்கு 3 முறை முயற்சிக்கும். மூன்று முறைக்கு மேல் மூட முடியாமல் போனால், கதவு நிரந்தரமாகவே திறந்துவிடும். அதன்பிறகு ஊழியர்கள் நேரில் வந்து சரி செய்தால்தான் கதவு தானாக திறந்து மூடும் நிலைக்கு வரும். மேலும், ரயில் பெட்டியில் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் சேலை, துப்பட்டா, வேட்டி, பைகள் போன்றவற்றை மிக கவனமாக கையாள வேண்டும் என்று ரயில் பெட்டிக்குள் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அபாய ஒலி எழுப்பும் அலாரம் பட்டன்களும் ரயில் பெட்டிகளுக்குள் உள்ளன. ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அலாரம் பட்டனை அழித்து ரயில் ஓட்டுநர்களை எச்சரிக்கலாம். அவசர காலம் என்றாலும் உடனடியாக ரயில் இயக்குபவர்களுக்கு தகவல் அளிக்கலாம். அந்த தகவல் அடுத்த ரயில் நிலையத்துக்கு அனுப்பி விடுவார். அங்கு ரயில் சென்றதும் தேவையான உதவிகள் செய்ய அங்கு ஊழியர்கள் காத்திருப்பார்கள். இவ்வாறு மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x