

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையை பொறுத்தவரையில், தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: 6-வது நபர் கைது: நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6-வது நபராக தேடப்பட்டு வந்த மகேஷ் குமாவத் டெல்லி போலீசாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, மக்களவை அத்துமீறலில் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் லலித் ஜா மற்றும் அவரது கூட்டாளிகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர் என்று நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
“அத்துமீறலை பயங்கரவாதம் எனக் கூறியது டெல்லி போலீஸ்தான்” - காங்.: நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறலை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கவில்லை என்றும், டெல்லி போலீஸ்தான் அதனை பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறியுள்ளது என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மக்களவை அத்துமீறல் - ராகுல் காந்தி அடுக்கும் காரணங்கள்: காங்கிரஸ் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் குறித்து அவரது கருத்தைக் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “நிச்சயமாக பாதுகாப்பு மீறல் உள்ளது. ஆனால் அது ஏன் நடந்தது? நாட்டின் முன் உள்ள மிகப் பெரிய பிரச்சினை வேலையில்லா திண்டாட்டமும், பணவீக்கமுமே. நரேந்திர மோடியின் தவறான கொள்கை காரணமாக நாடு பிரச்சினைகளால் கொழுந்துவிட்டு எரிகிறது. வேலை இல்லாததால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தப் பிரச்னைகளில் கவனம் செலுத்தி அரசு இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
‘நிவாரண நிதி வழங்கும் நாட்களில் மதுக்கடைகளை மூடுக’ - அன்புமணி: தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.6000 நிதி, குடிக்கு செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், நிவாரண நிதி வழங்கப்படும் நாட்களில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
“வெள்ள நிவாரணமாக ரூ.10,000 வழங்க வேண்டும்” - அண்ணாமலை: “வெள்ள நிவாரணமாக மக்களுக்குக் குறைந்தது ரூ.10,000 ஆவது வழங்க வேண்டும். மாநில அரசை மத்திய அரசின் அதிகாரிகள் விமர்சனம் செய்ய மாட்டார்கள். அது ஒரு மாண்பு. திமுக செயல் இழந்து நிற்கிறது. அவர்கள் மோசமாகப் பேரிடர் காலத்தைக் கையாண்டு இருக்கிறார்கள்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“நம்பியவர்களே முதுகில் குத்தியதால் தேமுதிகவுக்கு சறுக்கல்”: “விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆன மூன்று மாதங்களில் யாரையெல்லாம் நம்பி எம்எல்ஏ பதவி கொடுத்தாரோ, அவர்கள் அனைவரும் அவரின் முதுகில் குத்திவிட்டனர். அவர்கள் செய்த துரோகங்களும், அதற்குப் பிறகு நடந்த ஒவ்வொரு விஷயமும் ஒரு பெரிய சறுக்கலை தலைவருக்கும் தேமுதிகவுக்கும் ஏற்படுத்தியது” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
“இலவசங்களை தருவதில் ‘போட்டாபோட்டி’ ஆபத்தானது”: “மக்களுக்கு இலவசங்களை அரசாங்கம் வழங்கலாம். ஆனால், அதைப் பெறுபவர்கள் ஏழை மக்களாக மட்டுமே இருக்க வேண்டும். இலவசங்களின் பலன்கள் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். இலவசங்களின் பலன்கள் இன்னாருக்குத்தான் என்றில்லாம் இலக்கற்றுப் போகும்போதுதான் பிரச்சினை எழுகிறது. அதேபோல் யார் மக்களுக்கு அதிக இலவசங்களை தருவது என்று போட்டாபோட்டி போட்டால் அது ஆபத்தானது. அவ்வாறாக இலவசங்கள் வழங்கப்பட்டால் அது அரசை திவாலக்கலாம்” என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
“பழங்குடியினருக்கு எதிரான வன்முறையை காங். அனுமதிக்கிறது”: கார்நாடகாவின் பெலாகவியில் பட்டியலின பெண் ஒருவர் ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறையை அனுமதிக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். மேலும் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் வாக்கு வங்கி மட்டும் தான் என்று சாடியுள்ளார்.
மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா - வலுக்கும் அதிருப்தி: குஜராத் டைட்டன்ஸிலிருந்து மும்பை இந்தியன்ஸுக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியாவுக்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது அந்த அணியின் மூத்த வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஹர்திக் பாண்டியாவுக்கு களத்திலும், களத்துக்கு வெளியேயும் கடும் சவால்கள் காத்திருப்பதை இந்த அதிருப்திகள் உணர்த்தி வருகின்றன. பும்ராவை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பும்ரா, ‘சில தருணங்களில் மவுனமே சிறந்த பதில்’ என்று பதிவிட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் தன் சமூக ஊடகப் போஸ்ட்டில் ‘உடைந்த இருதயம்’ ஈமோஜியை வெளியிட்டு சூசகமாக தன் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.