Published : 16 Dec 2023 07:25 PM
Last Updated : 16 Dec 2023 07:25 PM

நாடாளுமன்ற பாதுகாப்பை ஆய்வு செய்ய உயர் அதிகாரம் கொண்ட குழு அமைப்பு: சபாநாயகர் ஓம் பிர்லா

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதியான செயல்திட்டத்தை வகுப்பதற்கான குழுவை தான் அமைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ‘நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த உயர்மட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை விரைவில் மக்களவையில் பகிரப்படும். மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்களை மறுஆய்வு செய்யவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் உறுதியான செயல்திட்டத்தை வகுக்க உயர் அதிகாரம் கொண்ட குழுவை நான் அமைத்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: கடந்த புதன்கிழமை மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞர்கள் கைகளில் புகை குப்பியுடன் குதித்து பரபரப்பை ஏற்படுத்தினர். அதேவேளையில் அவைக்கு வெளியே நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகிய இருவர் கோஷமிட்டு கைதாகினர். அவர்களிடமிருந்தும் வண்ண புகைக் குப்பிகள் கைப்பற்றப்பட்டன. அந்த 4 பேருடன் சேர்த்து இந்தச் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட லலித் மோகன் ஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மகேஷ் குமாவத் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

6-வது நபர் கைது: இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மகேஷ் குமாவத் டெல்லி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் லலிதா ஜா, டெல்லியில் இருந்து ராஜஸ்தானுக்கு தப்பியோடி மகேஷ் குமாவத்துக்குச் சொந்தமான இடத்தில் மறைந்து இருந்துள்ளார். அதோடு, முதலில் கைது செய்யப்பட்ட 4 பேரின் செல்போன்களை உடைத்து அழித்ததிலும் இவருக்கு பங்கு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நீலம் தேவியோடு மகேஷ் குமாவத் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மகேஷ் குமாவத்தின் நெருங்கிய உறவினரான கைலாஷ் என்பவரையும் டெல்லி போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். எனினும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் அமளி: பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே நாடாளுமன்றத்துக்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகவும், இது குறித்து பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மக்களவை உறுப்பினர்கள் 13 பேர், மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் என மொத்தம் 14 எம்.பிக்கள் நடப்பு கூட்டத் தொடர் முழுவதற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாளை மறுநாள் மீண்டும் நாடாளுமன்றம் கூட உள்ளது. இந்தப் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நாடாளுமன்ற அத்துமீறல் என்பது பாதுகாப்பு குறைபாடுதான் என்றாலும், அதன் பின்னால் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் காரணங்களாக இருக்கின்றன என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதன் முழு விவரம் > “நாடாளுமன்ற அத்துமீறல் பின்புலத்தில் வேலையின்மை, பணவீக்கம்” - ராகுல் காந்தி அடுக்கும் காரணங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x