Published : 16 Dec 2023 03:43 PM
Last Updated : 16 Dec 2023 03:43 PM

“இலவசங்களை தருவதில் ‘போட்டாபோட்டி’ ஆபத்தானது. ஏனெனில்...” - ரகுராம் ராஜனின் எச்சரிக்கை பார்வை

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் | கோப்புப் படம்

புதுடெல்லி: "மக்களுக்கு இலவசங்களை அரசாங்கம் வழங்கலாம். ஆனால், அதைப் பெறுபவர்கள் ஏழை மக்களாக மட்டுமே இருக்க வேண்டும். இலவசங்களின் பலன்கள் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்” என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன் அளித்த பேட்டி ஒன்றில், "மக்களுக்கு இலவசங்களை அரசாங்கம் வழங்கலாம். ஆனால், அதைப் பெறுபவர்கள் ஏழை மக்களாக மட்டுமே இருக்க வேண்டும். இலவசங்களின் பலன்கள் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். இலவசங்களின் பலன்கள் இன்னாருக்குத்தான் என்றில்லாம் இலக்கற்றுப் போகும்போதுதான் பிரச்சினை எழுகிறது. அதேபோல் யார் மக்களுக்கு அதிக இலவசங்களை தருவது என்று போட்டாபோட்டி போட்டால் அது ஆபத்தானது. அவ்வாறாக இலவசங்கள் வழங்கப்பட்டால் அது அரசை திவாலக்கலாம்.

அதேவேளையில், இலவசங்களைப் பெறும் நபர்கள் யார் என்ற இலக்கை சரியாக நிர்ணயிப்பதுடன், அதில் கவனமாக செயல்பட்டால் சில காலத்திலேயே தேவை நீங்கி, அத்திட்டத்தை நிறுத்த இயலும். பின்னர் அந்த நிதியை பள்ளிகள் மேம்பாடு, சுகாதார மேம்பாடு, ஊட்டசத்து மேம்பாடு போன்றவற்றுக்கு மடைமாற்றலாம்.
பழைய பென்ஷன் திட்டத்துக்கு திரும்புதல் போன்ற மோசமாக திட்டங்கள் சில, அரசாங்க நிதியை வளர்ச்சிக்குப் பயன்படுத்தவிடாமல் முடக்கிவிடும். இமாச்சலப் பிரதேசம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துகிறது. இதுமாதிரியான திட்டங்கள் ஏற்கெனவே நல்ல நிலையில் இருக்கும் சாரரையே சென்றடையும். இவ்வாறாக. ஒரு திட்டத்தை செயல்படுத்தி அரசு நிதியை ஏன் அதலபாதாளத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். இதுபோன்ற திட்டங்கள்தான் வேண்டாம் எனக் கூறுகிறேன்.

தேர்தல் வாக்குறுதிகளில் இலவச அறிவிப்பை வாரி வழங்கிய கட்சிகள் பின்னாளில் என்னிடம் வந்து இலவச வாக்குறுதியை நிறைவேற்ற யோசனை கேட்டு நிற்பார்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், நான் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது, ஒவ்வொரு மாநிலமாக விவசாயக் கடன் ரத்தை அறிவித்துக் கொண்டிருந்தது. தேர்தலுக்குப் பின்னர் அவர்கள் என்னிடம் ‘சார், கடன் ரத்துக்கு என்ன வழி? எப்படிச் செய்யலாம்?’ என ஆலோசனை கேட்பார்கள். அரசாங்கத்தின் சிக்கல்களை ஆராய சில சுயாதீன அமைப்புகள் தேவை. அவை தேர்தல் வாக்குறுதிகள்” என்றார்.

அரசியல்வாதிகள் நிதித்துறை வல்லுநர்களின் ஆலோசனைகளுக்கு செவிமடுப்பார்களா என்ற கேள்விக்கு, ”முக்கியமான கருத்துகளை மீண்டும் மீண்டும் பொதுவெளிக்குக் கொண்டு செல்லும்போது அது விவாதப் பொருளாகும். அப்போது சில அரசியல்வாதிகள் அங்கீகரிக்கலாம். நல்ல யோசனைகள் ஏற்று அமல்படுத்துகிறேன் என்று முன்வரலாம். அவ்வாறாக அரசியல்வாதிகள் தாமாகவே முன்வந்து பொறுப்பை ஏற்கத் தூண்ட வேண்டும். அந்த யோசனைகளை அவர்களுடையதாக்க சில மாறுதல்களை அனுமதிக்க வேண்டும். அதன்பின்னர் அந்த யோசனைகள் அமலாகிவிடும். அதனால் யோசனைகளை முதலில் விவாதப் பொருளாக்க வேண்டும்” என்றார்.

‘இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு ஆதரவு ஏன்?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த ரகுராம் ராஜன், ”நான் எல்லாவிதமான ஆலோசனைகளையும் ஆதரிக்கிறேன். யஷ்வந்த் சின்ஹா நிதியமைச்சராக இருந்தபோது நான் அவருக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். நான் பல்வேறு கட்சிகளுடன் ஆலோசனை செய்கிறேன். திமுகவுக்கு ஆலோசனை வழங்குகிறேன்.காங்கிரஸ் கட்சியிடனும் பணியாற்றியுள்ளேன். பிற கட்சிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளேன். தேசத்தை முன்னோக்கி கொண்டு செல்வதுதான் இலக்கு. நம் பொது இலக்கு அதுதான். திட்டங்களுடன் நம்மை தொடர்புபடுத்த வேண்டுமே தவிர வெறும் புற அடையாளத்துடன் அல்ல” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x