Published : 16 Dec 2023 11:54 AM
Last Updated : 16 Dec 2023 11:54 AM

மக்களவை அத்துமீறல் | நாட்டில் குழப்பத்தை உருவாக்க முயற்சி; வெளிநாட்டு தொடர்பு பற்றி விசாரணை: போலீஸ் தகவல்

கைதான நபர்கள்

புதுடெல்லி: மக்களவை அத்துமீறலில் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் லலித் ஜா மற்றும் அவரது கூட்டாளிகள் தங்களது கோரிக்கையை அரசு ஏற்பதற்காக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர் என்று டெல்லி போலீஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஆஜர்படுத்தி தாக்கல் செய்த அறிக்கையில் டெல்லி சிறப்பு போலீஸார் இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் குறித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு ஏதாவது வெளிநாட்டு தொடர்போ, தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து புதன்கிழமை (டிச.13) புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்து ஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதேநேரத்தில், இந்த இருவருக்கும் ஆதரவாக நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே 2 பேர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். வண்ண புகையை வெளியேற்றும் குப்பிகளையும் வைத்திருந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது.

அத்துமீறல் சம்பவம்: மக்களவைக்குள் புகுந்தவர்கள் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா மற்றும் பெங்களூரு விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற மைசூருவை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் (35) இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே கோஷமிட்ட ஹரியாணாவை சேர்ந்த நீலம் (42) என்ற பெண், அமோல் ஷிண்டே (25). இவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்துக்கு திட்டமிட்டதாகவும் மூளையாக செயல்பட்டதாகவும் கூறப்படும் லலித் மோகன் ஜா வியாழக்கிழமை கடமைப் பாதை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர், டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து லலித் ஜா, வெள்ளிக்கிழமை பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதனிடையே, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் குற்ற சம்பவத்தினை கைதானவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை காவல்துறை முன்னால் மீண்டும் நிகழ்த்திக் காட்ட நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற உள்ளோம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “கைது செய்யப்பட்டுள்ள லலித் ஜா, ஆதாரங்களை அழிப்பதற்காக தன்னுடைய, நண்பர்களின் செல்போன்களை ஜெய்பூருக்கு அருகே உடைத்து ஏறிந்துவிட்டதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தினை நன்றாக திட்டமிட்டு நிகழ்த்தியுள்ளனர். அதற்காக நோட்டமிடுவதற்காக பல முறை டெல்லி வந்து சென்றுள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் குற்றச்சம்பவம் நடந்த பின்னர் ஆதாரங்களை அழிக்க முயற்சி நடந்திருப்பதால் இந்த சம்பவத்துக்கு வெளிநாட்டு நிதி ஆதாரம் ஏதாவது வழங்கப்பட்டிருக்கிறதா, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்” என்றார்.

இரு அவைகளும் ஒத்திவைப்பு: இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாட்டை கண்டித்து எதிர்க்கட்சியினர் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதற்காக கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் வெள்ளிக்கிழமை 2-வது நாளாக, அவை கூடியதும் எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். இதனால், மக்களவையும், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றம் முடக்கம்: இதனிடையே, மக்களவை அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கையளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் முடக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "இந்தச் சம்பவம் குறித்து அவையில் தொடர்ந்து கேள்வி எழுப்பவது தொடர்பாக முடிவு செய்ய திங்கள்கிழமை மீண்டும் ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் கூட்டம் நடக்கும் என்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. வரும் 22–ம் தேதிவரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x