Published : 16 Dec 2023 05:21 AM
Last Updated : 16 Dec 2023 05:21 AM

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் முதல் முக்கிய நபர் சரண் வரை @ நாடாளுமன்ற அத்துமீறல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்கக் கோரி, இடைநீக்கம் செய்யப்பட்ட 14 எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியினரின் அமளியால் 2-வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தில் கடந்த 13-ம் தேதி பார்வையாளர்களாக நுழைந்த சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகியோர் திடீரென்று, மக்களவை உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி ஓடி, வண்ணப் புகைக் குப்பிகளை வீசினர். இவர்களுக்கு ஆதரவாக அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய இருவர் நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ண புகைக் குப்பிகளை வீசி கோஷமிட்டனர்.

நாடாளுமன்ற தீவிரவாதத் தாக்குதலின் 22-வது நினைவு தினத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாட்டை கண்டித்து எதிர்க்கட்சியினர் நேற்று முன்தினம் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்டதற்காக கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

நேற்று 2-வது நாளாக, அவை கூடியதும் எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். இதனால், மக்களவையும், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. வரும் 22–ம் தேதிவரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக இருஅவைகளும் நேற்றும் ஒத்திவைக்கப்பட்டன.

சோனியா காந்தி பங்கேற்பு: இதற்கிடையே, இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக கூடி, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும்பங்கேற்றார்.

திமுக எம்.பி. கனிமொழி கூறும்போது, “தாங்கள் மட்டும்தான் நாட்டை பாதுகாப்பதாக பாஜக கூறிவருகிறது. ஆனால், அவர்களால் நாடாளுமன்றத்தைக்கூட பாதுகாக்க முடியவில்லை.நாங்கள் இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறோம் என்று கூறுகிறார்கள். பாதுகாப்பு குறைபாட்டுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு. பிரதமரும் உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்துக்கு வந்து, இதுகுறித்து எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், அவர்கள் இங்கு வரவில்லை” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர் கூறும்போது, “உள்துறை அமைச்சர்தான் டெல்லி காவல் துறைக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் பொறுப்பானவர். முறைப்படி, நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக, இங்கு வந்து எம்.பி.க்களிடம் அவர் விளக்கம் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவர், அதை தவிர்த்துவிட்டு, ஊடகங்களுக்கு அறிக்கை அளித்துக்கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்தார்.

மூளையாக செயல்பட்ட முக்கிய நபர் சரண்: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா, பெங்களூருவை சேர்ந்த மனோ ரஞ்சன், ஹரியாணாவை சேர்ந்த நீலம், மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரை சேர்ந்த அமோல் ஷிண்டே, குருகிராமில் வசித்துவந்த விஷால் சர்மா, பிஹாரை சேர்ந்த லலித் ஜா ஆகிய6 பேரும் ‘பகத் சிங் ஃபேன் கிளப்' என்ற சமூகவலைதள பக்கம் மூலம் நண்பர்களாகி உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து கோஷமிட திட்டமிட்ட அவர்கள், கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்துக்கு வந்தனர். சாகர் சர்மா, மனோ ரஞ்சன் ஆகிய இருவருக்கு மட்டும் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மூலம் நுழைவுச் சீட்டு கிடைத்ததால், அவர்கள் மட்டும் மக்களவையில் நுழைந்து வண்ண புகைக் குப்பிகளை வீசினர். அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய இருவரும் நாடாளுமன்றத்துக்கு வெளியே கோஷமிட்டனர். இவர்கள் நால்வர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷால் சர்மா வீட்டில் இவர்கள் தங்கி இருந்த நிலையில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் மூளையாக செயல்பட்ட லலித் ஜா, அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்த பின்னர் ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி இரவு டெல்லி காவல் துறையிடம் அவர் சரண் அடைந்தார். அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x