Published : 16 Dec 2023 05:17 AM
Last Updated : 16 Dec 2023 05:17 AM
அமராவதி: ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு முன்னாள் எம்.எல்.சி ஆகியோர் நூற்றுக்கணக்கான தங்கள் ஆதரவாளர்களுடன் நேற்று சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இன்னும் 6 மாதத்திற்குள் சட்டப்பேரவைதேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் இப்போதிலிருந்தே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன. ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சியுடன் நடிகர் பவன் கல்யாண் கூட்டணியை அறிவித்துள்ளார். ஆனால் இம்முறையும் ஜெகன்கட்சியினர் தனித்தே போட்டியிடுவோம் என அறிவித்துள்ளனர்.
வரும் தேர்தலில், பாஜக தனித்து போட்டியிடுமா ? அல்லது தெலுங்கு தேசம் கட்சியுடன் இணையுமா? என்பது புதிராக உள்ளது.
அதேசமயத்தில், ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ். ஷர்மிளா, தெலுங்கு தேசம் - பவன் கல்யாண் கூட்டணியுடன் இணைந்து செயல்படலாம் எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இம்முறை ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிஒருவேளை காங்கிரஸ் களத்தில் இறங்கினால், மாநிலத்தை பிரித்தகாங்கிரஸுக்கு தனித்து நின்றால் ஓட்டு விழாது என்பதால், அக்கட்சியினர் கூட்டணி வைக்கவே முன் வருவர். ஆதலால் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் இம்முறை ஆந்திராவில் தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஊர்வலம்: ஆந்திராவில் கூட்டணி கணக்குகள் போடப்பட்டு வரும் நிலையில், கட்சி தாவும் படலம் தொடங்கி உள்ளது. நேற்று ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாட்டிகொண்டா தொகுதி எம்.எல்.ஏவான உண்டவல்லி தேவி, உதயகிரி எம்.எல்.ஏவான எம்.சந்திரசேகர ரெட்டி ஆகிய இருவரும் அமராவதியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தனர். மேலும், ஜெகன் கட்சியை சேர்ந்த முன்னாள் மேலவை உறுப்பினரான ராதாகிருஷ்ணய்யாவும் அவரதுஆதரவாளர்கள் ஏராளமானோருடன் ஊர்வலமாக வந்து தெலுங்குதேசம் கட்சியில் இணைந்தார். இது முதல்வர் ஜெகன் மோகன் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரபாபு நாயுடு கருத்து: முன்னதாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘‘ஆந்திர தேர்தல் என்பது 5 கோடி மக்களுக்கும், சர்வாதிகாரி ஒருவருக்கும் இடையே நடக்கும் யுத்தம். இதில், நான் மக்கள் பக்கம் நிற்கிறேன். ஜெகன் கட்சியில், மக்களின் அதிருப்தியில் உள்ள 150 எம்எல்ஏக்களுக்கு பதிலாக மற்றவர்களை தேர்தலில் நிற்க வைத்தாலும், அக்கட்சி தேர்தலில் தோற்பது உறுதி" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT