Published : 15 Dec 2023 11:49 AM
Last Updated : 15 Dec 2023 11:49 AM
சென்னை: மக்களவையில் 2 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து வண்ண புகை குப்பிகளை வீசிய விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டது தொடர்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 14 எம்.பி.க்கள் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இன்று காலை முதல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியபடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பி கே.சுரேஷ் கூறுகையில், “எங்கள் கோரிக்கை உண்மையானது. இந்தத் தாக்குதலானது மக்களவை அறைக்குள் நடந்ததுள்ளது. இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமானது. பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், "கேள்வி கேட்பது எங்களுடைய கடமை. எங்கள்மீது குற்றம் சாட்டி, நாங்கள் அரசியல் செய்கிறோம் என்று கூறினால், அந்த பிரச்சினையை அரசு திசை திருப்ப முயற்சிக்கிறது என்று அர்த்தம். இது குறித்து பிரதமர் ஏதாவது தெரிவித்திருக்கிறாரா?” என்று வினவினார். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அவர்களைச் சந்தித்துப் பேசினார்.
நடந்தது என்ன? - நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. வரும் 22–ம் தேதிவரை இக்கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், மக்களவை நடைபெறும்போது, பார்வையாளர் அரங்கில் இருந்த 2 இளைஞர்கள் திடீரென புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதுபோன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்ளிட்ட இருவர் வண்ண புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மக்களவை நேற்று கூடியதும், ‘‘முந்தைய நாள் சம்பவம் குறித்து பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். 2 இளைஞர்களுக்கு பாஸ் வழங்கிய பாஜக எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
இதற்கு பாதுகாப்பு அமைச்சர்ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். “நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. சபையில் இதுபோல குழப்பம் ஏற்படுத்தக்கூடிய நபர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்குவதை அனைத்து உறுப்பினர்களும் தவிர்க்க வேண்டும். சம்பவம் குறித்து ஏற்கெனவே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
14 எம்.பிக்கள் இடைநீக்கம்: மாநிலங்களவையிலும் நேற்று இப்பிரச்சினை எதிரொலித்தது. இந்நிலையில், இதுதொடர்பாக நேற்று காங்கிரஸ், திமுகஉள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த14 எம்.பி.க்கள் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.கே.கண்டன், பென்னி பெஹனன், முகமது ஜாவேத், மாணிக்கம் தாகூர் ஆகிய 4 எம்.பி.க்கள், திமுகவை சேர்ந்த கனிமொழி, எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகிய 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன் ஆகிய இருவர், மார்க்சிஸ்ட் கட்சியின்சு.வெங்கடேசன் என 9 எம்.பி.க்கள்கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
திமுக எம்.பி.பார்த்திபன் நேற்று டெல்லியிலேயே இல்லை. சென்னையில்தான் இருந்தார். ஆனால், அவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,எஸ்.ஆர்.பார்த்திபனின் பெயர்த வறுதலாக இடம் பெற்றுவிட்டதாக கூறி அவருக்கு எதிரான இடைநீக்க உத்தரவை சபாநாயகர் ஓம் பிர்லா திரும்ப பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT