Published : 15 Dec 2023 09:05 AM
Last Updated : 15 Dec 2023 09:05 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், இன்று அம்மாநில முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்க இருக்கிறார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் வேட்பாளர் ஒருவரின் மறைவை அடுத்து 199 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 69 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் அமைச்சர் வாசுதேவ் தேவ்நானி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், தனது 56-வது பிறந்தநாளான இன்று (டிச.15) ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவியேற்க உள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆல்பர்ட் வளாகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நண்பகல் 12 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
எம்எல்ஏக்கள் தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா இருவரும் துணை முதல்வர்களாக பதவி ஏற்கின்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு ஜெய்ப்பூரில் உள்ள மோத்தி துங்ரி கணேஷ் கோயிலில் பிரேம் சந்த் பைரவா சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT