Published : 15 Dec 2023 05:43 AM
Last Updated : 15 Dec 2023 05:43 AM

பாதுகாப்பு அத்துமீறல் | அமைச்சர்களுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை: நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தீவிரவாத தாக்குதலின் 22-வது நினைவு தினத்தில், மக்களவையில் பார்வையாளர்களாக நுழைந்த சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகியோர் வண்ண புகை குப்பிகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். இவர்களுக்கு ஆதரவாக அமோல் ஷிண்டே, நீலம் தேவி ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு வெளியே வண்ண புகை குப்பிகளை வீசி ‘அராஜகம் ஒழிக’ என கோஷமிட்டனர்.

இதை வீடியோ எடுத்து லிலித் ஜா என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அவரிடம் நீலம் தேவி, அமோல் ஷிண்டே,சாகர் மற்றும் மனோரஞ்சன் ஆகியோரது செல்போன்கள் உள்ளன. குற்றவாளிகள் அனைவரும் குருகிராமில் உள்ள விஷால்என்பவர் வீட்டில் கடந்த செவ்வாய் இரவுதங்கியுள்ளனர். மறுநாள் காலை நாடாளுமன்றத்துக்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து வண்ண புகை குப்பியை வீசிஅரசுக்கு எதிராக கோஷமிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், சாகர், மனோரஞ்சன் ஆகியோருக்கு மட்டுமே மக்களவை பார்வையாளர் மாடத்துக்குள் செல்ல ‘பாஸ்’ கிடைத்தது. இவர்கள் 6 பேரும் கடந்த 4 ஆண்டுகளாக, சமூக இணையதளம் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக, நாடாளுமன்றத்தில் நுழைந்து அத்துமீறும் சதி திட்டத்தை தீட்டியுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் லலித் ஜா மட்டும் தலைமறைவாக இருக்கிறார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிரியர், இந்த சதி திட்டத்தில் முக்கிய நபராக உள்ளார். இவரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

இவர்கள் மீது நாடாளுமன்ற சாலையில் உள்ள காவல் நிலையத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ)ன்16-வது பிரிவு (தீவிரவாத செயலுக்கு தண்டனை), 18-வது பிரிவு (தீவிரவாத செலுக்கான சதி திட்டம்), மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. யுஏபிர சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால் ஜாமீனில் வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பிரிவுகளில் குறைந்தது 5 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

அரசியலாக்க வேண்டாம்: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் கூறியதாவது: மக்களவையில் நடந்த சம்பவம்துரஅதிர்ஷ்டமானது. இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் அவைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக கூறப்பட்ட அனைத்து ஆலோசனைகளும் கேட்கப்பட்டன. எம்.பி.க்கள் சிலர் தெரிவித்த யோசனைகள் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சபாநாயகர் கூறியுள்ளார்.

இதுபோன்ற தேசிய விஷயத்தில், யாரும் அரசியல் செய்யக் கூடாது. பார்வையாளர் மாடத்திலிருந்து கோஷமிடுதல், குதித்தல்,காகிதங்கள் தூக்கி எறிதல் போன்ற சம்பவங்கள் நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்த உள்துறை செயலாளருக்கு, சபாநாயகர் கடிதம் எழுதியுள்ளார். அந்த விசாரணை தொடங்கிவிட்டது. எனவே இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என நான் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மக்களவையில் நடைபெற்ற அத்துமீறல் சம்பவம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்துகோஷமிட்டனர். அவர்களை சபாநாயகர் ஓம்பிர்லாவால் அமைதிப்படுத்த முடியவில்லை. அதன்பின் விளக்கம் அளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதுபோன்றசம்பவங்கள் பழைய நாடாளுமன்றத்திலும் நடைபெற்றுள்ளது. அத்துமீறி கோஷமிட்டவர்களுக்கு எந்த காரணமும் இல்லை. இச்சம்பவத்துக்கு நாம் அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என கூறினார்.

இதையடுத்து மக்களவை அத்துமீறல் சம்பவம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதன்பின் அவையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அனுராக் தாக்கூர், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோருடன், பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்தினார்.

8 பாதுகாப்பு படை வீரர்கள் தற்காலிக பணிநீக்கம்: டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்துக்கு பார்வையாளர்களாக வருவோருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனைகளை முடித்து பார்வையாளர் மாடத்துக்குள் சென்ற 2 இளைஞர்கள் தங்கள் காலணியில் வண்ண புகை குப்பிகளை மறைத்து வைத்துள்ளனர். இதை கண்டுபிடிப்பதில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இதையடுத்து, ராம்பால், அரவிந்த், வீர் தாஸ், கணேஷ், அனில், பிரதீப், விமித் மற்றும் நரேந்திரா ஆகிய 8 பேரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு: அத்துமீறல் சம்பவத்தையடுத்து, புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுன்றத்துக்கு வெளியேயுள்ள டிரான்ஸ்போர்ட் பவனில் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அடையாள அட்டைகளை சோதனை செய்த பின்பே நாடாளுமன்றத்துக்கு தொடர்புடையவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்துக்கு வந்த மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மாவின் கார் கூட நுழைய முடியவில்லை. அவர் காரில் இருந்து இறங்கி சர்துல் துவார் வழியாக நாடாளுமன்றத்துக்கு சென்றார். எம்.பி.க்களின் டிரைவர்களிடம் பாஸ் இல்லை என்றால், அவர்களும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் பத்திரிக்கையாளர்களிடமும் அடையாள அட்டை கேட்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பத்திரிக்கையாளர்கள் கூடும் இடம் பழைய நாடாளுமன்றத்தின் 12-ம் எண் நுழைவாயிலுக்கு அருகே உள்ள புல்வெளிக்கு மாற்றப்பட்டது.

ராணுவத்தில் சேர விரும்பியவர் அன்மோல்: நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர மாநிலம் லத்தூரைச் சேர்ந்த அமோல் ஷிண்டேவின் (25) பெற்றோர் கூறியது: எங்களது மகன் அமோல் ஷிண்டே ராணுவத்தில் சேர்ந்து தேசத்துக்காக பணியாற்ற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். அசாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்களுக்கு அடிக்கடி சென்று வருவார். வேலையில்லாத நேரத்தில் தினசரி கூலித் தொழிலாளியாகவும் அவர் பணியாற்றி வந்தார். மேலும் படிக்க வேண்டும் என்று விரும்பிய அன்மோல் மாதம் ரூ.4,000 வேண்டும் என கேட்டார். ஆனால், அதை எங்களால் கொடுக்க முடியவில்லை. அன்மோல் கைதான பிறகு எங்களது வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் அவரது விளையாட்டு சான்றிதழ்களை எடுத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஹரியாணா மாநிலம் ஹிசார் பகுதியைச் சேர்ந்த நீலம் என்பவருடன் சேர்ந்து அன்மோல் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, “சர்வாதிகாரத்தை அனுமதிக்க முடியாது, பாரத் மாதா கி ஜே, ஜெய் பீம், ஜெய் பாரத்” போன்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x