Published : 15 Dec 2023 05:29 AM
Last Updated : 15 Dec 2023 05:29 AM

நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் முதல் 14 எம்.பி.க்கள் இடைநீக்கம் வரை: முழு விவரம்

மாநிலங்களவையில் நேற்று திரிணமூல் உறுப்பினர் டெரிக் ஓ பிரையனின் நடத்தையால் கோபமடைந்து அவரை கண்டித்த அவைத் தலைவர் ஜகதீப் தன்கர்

புதுடெல்லி: மக்களவையில் 2 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து வண்ண புகை குப்பிகளை வீசிய விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, காங்கிரஸ், திமுகஉள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த14 எம்.பி.க்கள் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. வரும் 22–ம் தேதிவரை இக்கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மக்களவை நேற்று முன்தினம் நடைபெறும்போது, பார்வையாளர் அரங்கில் இருந்த 2 இளைஞர்கள் திடீரெனபுகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதுபோன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்ளிட்ட இருவர் வண்ண புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 4 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், ‘‘முந்தைய நாள் சம்பவம் குறித்து பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். 2 இளைஞர்களுக்கு பாஸ் வழங்கிய பாஜக எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இதற்கு பாதுகாப்பு அமைச்சர்ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். “நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. சபையில் இதுபோல குழப்பம் ஏற்படுத்தக்கூடிய நபர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்குவதை அனைத்து உறுப்பினர்களும் தவிர்க்க வேண்டும். சம்பவம் குறித்து ஏற்கெனவே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்கு மக்களவை செயலகமே பொறுப்பு என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அவையின் மையப் பகுதிக்கு வந்துஅமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

அவை மீண்டும் கூடியதும், மத்திய அரசு சார்பில் ஓர் அறிக்கையை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வாசித்தார். நாடாளுமன்றத்தின் உட்புற பாதுகாப்பு, சபாநாயகரின் கட்டுப்பாட்டின்கீழ் வருவதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, 5 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை அவர் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம்நிறைவேறியது.

இதன்படி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டிஎன்.பார்த்திபன், ஹிபி ஈடன், டீன் குரியகோஸ், ரம்யா ஹரிதாஸ், எஸ்.ஜோதிமணி ஆகிய 5 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடியதும், அமைச்சர் ஜோஷி மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்தார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.கே.கண்டன், பென்னி பெஹனன், முகமது ஜாவேத், மாணிக்கம் தாகூர் ஆகிய 4 எம்.பி.க்கள், திமுகவை சேர்ந்த கனிமொழி, எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகிய 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன் ஆகிய இருவர், மார்க்சிஸ்ட் கட்சியின்சு.வெங்கடேசன் என 9 எம்.பி.க்கள்கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

வராத எம்.பி.யும் நீக்கம்: இந்நிலையில், திமுக எம்.பி.பார்த்திபன் நேற்று டெல்லியிலேயே இல்லை. சென்னையில்தான் இருந்தார். ஆனால், அவரும் இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளார் என்று பின்னர்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,எஸ்.ஆர்.பார்த்திபனின் பெயர்தவறுதலாக இடம் பெற்றுவிட்டதாக கூறி அவருக்கு எதிரான இடைநீக்க உத்தரவை சபாநாயகர் ஓம் பிர்லா திரும்ப பெற்றார்.

மாநிலங்களவையிலும் நேற்று இப்பிரச்சினை எதிரொலித்தது. திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், அவைத் தலைவர் தன்கரின் முன்னால் உள்ள பகுதிக்குச் சென்று கைகளை உயர்த்தி ஏதோ கூறினார். இதனால் கோபமடைந்த தன்கர், பிரையனை அவையை விட்டு வெளியேறுமாறு கூறினார். பிரையனின் நடத்தை முற்றிலும் தவறானது என கண்டித்தார். பிறகு பிரையனும் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மாலை 4 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், இடைநீக்கம் செய்யப்பட்ட டெரிக் ஓ பிரையன் அவையை விட்டு வெளியேறுமாறு ஜகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அவையை விட்டு பிரையன் வெளியேறவில்லை. இதையடுத்து, இந்தப் பிரச்சினையை விதி எண் 192-ன் கீழ் உரிமைக்குழுவுக்கு அனுப்ப அமைச்சர் பியூஷ் கோயல் தீர்மானம் கொண்டுவந்தார்.

இந்த தீர்மானம் நிறைவேறியதை தொடர்ந்து, இந்த விவகாரத்தை மாநிலங்களவை உரிமைக் குழு விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும் என தன்கர் தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவையை நாள் முழுவதும் அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x