Published : 14 Dec 2023 07:11 PM
Last Updated : 14 Dec 2023 07:11 PM
புதுடெல்லி: “எதிர்க்கட்சிகளை இந்த அரசு பயமுறுத்த நினைக்கிறது. தனது தோல்வியை மறைக்கவே கேள்வி கேட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று மக்களவை அத்துமீறல் விவகாரத்தில் பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
நாடாளுமன்ற மக்களவையில் புதன்கிழமை நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் அவை கூடியதும் இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உறுப்பினர்களை சமாதானப்படுத்த சபாநாயகர் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தை அடுத்து, அவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியதும், நேற்று நடந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிக்கை வாசித்தார். அவர், “நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. உறுப்பினர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. எனவே, இது குறித்து அரசு கவலை கொள்கிறது. சம்பவம் நடந்த உடன் அவைத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை சபாநாயகர் நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சில பரிந்துரைகள் ஏற்கெனவே அமலில் இருக்கின்றன. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்களவையின் பாதுகாப்பு, சபாநாயகரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. சம்பவம் நடந்ததும் உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்த சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். விசாரணை தொடங்கிவிட்டது. எனவே, இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
அவர் தனது உரையை வாசித்துக் கொண்டிருக்கும்போது, உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்கக் கோரி கோஷங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிலர் பதாகைகளைக் காட்டி வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக, அவை நடவடிக்கைக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டதாக கனிமொழி, ஜோதிமணி உள்பட 15 எம்.பி.க்கள் எஞ்சிய குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.
இடைநீக்கம் எத்தனை பேர்? - இந்த நிலையில், மக்களவையில் இல்லாத திமுக எம்.பி எஸ்.ஆர். பார்த்திபன் இடைநீக்கம் செய்யப்பட்டது தவறுதலாக நிகழ்ந்துவிட்டது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களவை எம்.பிக்கள் மொத்தம் 13 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவையில் இல்லாத ஒருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. சபாநாயகரை முற்றுகையிட்டவர்கள், சபாநாயகர் அருகே வந்து பதாகைகளைக் காட்டியவர்கள் குறித்து பட்டியலிட்ட எங்கள் அலுவலர்கள் செய்த தவறு அது. இது குறித்து சபாநாயகருக்கு தெரிவித்து அவரது பெயரை நீக்குமாறு கோரிக்கை விடுத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று அவரது பெயரை சபாநாயகர் நீக்கிவிட்டார்” என்றார். இந்த நிலையில், இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், “மக்களவையில் அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்கள் உள்ளே வருவதற்கு பாஸ் வழங்கிய எம்.பி. இன்னும் அவைக்குள் இருக்கிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், மஹுவா விவகாரத்தில் என்ன நடந்தது என்று நாம் எல்லோரும் பார்த்தோம். விசாரணை முழுமையாக முடியாத நிலையில், அவர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், இந்த எம்.பி.யோ இடைநீக்கம் கூட செய்யப்படவில்லை. அவர் எங்களுடன் அவைக்குள் அமர்ந்திருக்கிறார். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அவைக்கு வந்து நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். அதனை ஏற்று நிறைவேற்ற இந்த அரசு தயாராக இல்லை. அதனை வலியுறுத்தி நாங்கள் முழக்கங்கள் எழுப்பியதும் அவர்கள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்கிறார்கள் முதலில் 5, அடுத்து 9 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கூறுகையில், "மக்களவையில் நேற்று நடந்தது மிகப் பெரிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைத் தோல்வி. நேற்று என்ன நடந்தது, அது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரசு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ வந்து விளக்கம் அளிக்கப்போவதில்லை என்று அரசு பிடிவாதமாக உள்ளது. அதனால் நாங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினோம். எங்களின் குரல்களை நசுக்கும் விதமாக 15 எம்.பி.க்கள் எஞ்சிய குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளானர்.
இதில் நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால் அவையில் இல்லாத திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இடைநீக்கம் பெயர் பட்டியலில் பலரது பெயரை தோராயமாக சேர்த்திருக்கிறார்கள் என்பது இதில் இருந்து தெரிய வருகிறது. அரசின் இந்தச் செயல் அர்த்தமற்றது. நாங்கள் வேண்டுவதெல்லாம் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அவைக்கு வந்து நேற்று நடந்த நிகழ்வுகள் மற்றும் எதிர்காலத்தில் அவை நடக்காமல் இருக்க எடுக்கப்போகும் நடவடிக்கைகளை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்பதே" என்றார்.
ஐக்கிய ஜனதாதளம் எம்.பி ராஜீவ் ரஞ்சன் சிங் கூறும்போது: இந்த அரசு அதன் தோல்வியை மறைக்கவே இந்த இடைநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. அவர்கள் எதிர்க்கட்சிகளைப் பயமுறுத்த நினைக்கிறார்கள். பயத்தைக் காட்டி ஆட்சி செய்ய முடியாது. நேற்று நிகழ்ந்த பாதுக்காப்பு தோல்வி குறித்து எதிர்க்கட்சிகள் அறிக்கை வெளியிட வலியுறுத்துவதில் என்ன தவறு இருக்கிறது? உள்துறை அமைச்சர் அவைக்கு வந்து நடந்தவை குறித்து விளக்கவேண்டும். ஆனால், அவர்களோ எதிர்க்கட்சியினரை இடைநீக்கம் செய்கிறார்கள். அவர்களிடம் பெரும்பான்மை இருப்பதால் விரும்பியதை எல்லாம் செய்கிறார்கள். நேற்று மக்களவையில் நுழைந்தவர்கள் முஸ்லிமாகவோ, பாஸ் கொடுத்தது காங்கிரஸ் எம்.பி.யாகவோ இருந்துருந்தால் அவர்களின் (பாஜகவினர்) நடவடிக்கையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்" எனக் கூறியுள்ளார்.
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்.பி. என்.கே.பிரேமசந்திரன் கூறுகையில்,"இரண்டு குற்றவாளிகள் நாடாளுமன்றத்துக்குள் உள்ளே நுழைந்து அத்துமீறி அராஜகத்தில் ஈடுபட, சம்பந்தப்பட்டவர்களுக்கு பாஸ் வழங்கிய பாஜக எம்.பி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், உள்துறை அமைச்சரின் நடவடிக்கை அல்லது அறிக்கை குறித்து கேட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது நமது நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை கேள்விப்படாத துரதிருஷ்டமான சம்பவம். நாளையும், திங்கள்கிழமையும் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதையே செய்ய வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள். அனைவரையும் அவர்கள் இடைநீக்கம் செய்யட்டும்" என்றார்.
மாநிலங்களவை எம்.பி கபில் சிபல், "இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்கள் வளர்த்தெடுத்த கலாச்சாரம் இதுதான். நீங்கள் எதையாவது எதிர்க்கும்போது அவர்கள் உங்களைப் பேச அனுமதிக்க மாட்டார்கள். அதையும் மீறி ஏதாவது சொன்னால், அவை பதிவாகவில்லை என்பார்கள். இந்த நிலையில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து விவாதங்களில் பங்கெடுப்பதில் என்ன பயன்? நீங்கள் ஆரோக்கியமான விவாதங்களை அவையில் நடத்த வேண்டும். நாங்கள் அதைச் செய்தோம்" என்று கூறினார்.
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “எங்களுடைய ஒரே கோரிக்கை... உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து நேற்றைய பாதுகாப்பு அத்துமீறல் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே. அதற்காக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது இந்த அரசின் மனநிலையைக் காட்டுகிறது. இந்த அரசின் மனநிலை எதிர்க்கட்சிகளின் கேள்விகளை கேட்க தயாராக இல்லாத அவர்களுக்கு பதில் அளிக்க விரும்பாத ஜெர்மனியின் ஹிட்லர் அரசை போல உள்ளது" என்று சாடினார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்பி மனோஜ் ஜா கூறுகையில், "இதுபோன்ற சம்பவங்கள் அவையில் நடக்கும்போது, அது வெறும் நாடாளுமன்ற விவகாரம் மட்டும் இல்லை. அது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. நாடாளுமன்றத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத அரசால் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது. நான் சொல்வதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இந்த நாடு உங்கள் கைகளில் பாதுகாப்பாக இல்லை. ஒரு சம்பவம் நடந்து 24 மணிநேரமாகி விட்டது. இன்னும் நீங்கள் எதிர்க்கட்சிகள் முன்பு வரவில்லை. இந்த விவகாரத்கை அவையில் தொடர்ந்து எழுப்பி உள்துறை அமைச்சரை அவைக்கு வரவழைப்போம்" என்றார் உறுதியாக.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி பினோய் விஸ்வம் கூறுகையில், "எங்களுக்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சிபிஎம் என பல்வேறு பெயர்கள் இருக்கலாம். ஆனால் நாங்கள் இண்டியா என்ற ஒற்றை அணியின் கீழ் நிற்கிறோம். எங்களுடைய நோக்கம் எல்லாம் ஒன்றுதான்... ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது, நாடாளுமன்ற மாண்பை நிலைநிறுத்துவது. பாஜகவுக்கு நாடாளுமன்றம் மீதெல்லாம் அக்கறை இல்லை. நாடாளுமன்றத்தை அவர்கள் கேலிக்கூத்தாக்கியுள்ளார்கள். எம்.பி.யின் ஆதரவுடன் குற்றவாளிகளை அவர்கள் அவைக்குள் அழைத்து வந்து இங்கு அராஜகம் செய்துள்ளார்கள். 1930-களில் ஜெர்மன் நாடாளுமன்றத்தை எரித்த ஹிட்லரின் அடிச்சுவட்டை இவர்களை பின்பற்றுவதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை" என்று தெரிவித்தார்.
இதனிடையே, இதே விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தவறான நடத்தை மற்றும் அவைத் தலைவரின் உத்தரவுகளை மீறிய காரணத்துக்காக மாநிலங்களையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உபா சட்டத்தின் கீழ் வழக்கு: முன்னதாக, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் மீது உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த யுஏபிஏ சட்டம் (UAPA - Unlawful Activities Prevention Act) கடந்த 1967-ல் கொண்டுவரப்பட்டது. நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக நடைபெறும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் கைதான 6 பேர் மீதும் டெல்லி போலீஸார் இந்தக் கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT