Published : 14 Dec 2023 04:55 PM
Last Updated : 14 Dec 2023 04:55 PM
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை 2,366 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அம்மாநிலத்தின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் அனில் பைதாஸ் பாட்டீல் சட்டப்பேரவையில் இன்று (டிச.14) தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வறட்சி, பசி அதிகரித்துள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி வருவாய் கோட்டத்தில் அதிக பட்சமாக 951 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் குணால் பாட்டீல் கேட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் அனில் பைதாஸ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,366 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக மகாராஷ்டிர அரசுக்கு அறிக்கை வந்துள்ளது. அமராவதி வருவாய் கோட்டத்தில் 951 விவசாயிகளும், சத்ரபதி சம்பாஜிநகர் கோட்டத்தில் 877 பேரும், நாக்பூர் கோட்டத்தில் 257 பேரும், நாசிக் கோட்டத்தில் 254 பேரும், புனே கோட்டத்தில் 27 பேரும் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...