Published : 14 Dec 2023 11:56 AM
Last Updated : 14 Dec 2023 11:56 AM
புதுடெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் தொடர்பாக மக்களவைப் பணியாளர்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று (டிச.13) மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்து ஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை டெல்லி சிறப்பு போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக இன்று (டிச.14) மக்களவைப் பணியாளர்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை ஒத்திவைப்பு: இதற்கிடையில் மக்களவை இன்று காலை கூடியதிலிருந்து எதிர்க்கட்சியினர் நேற்றைய சம்பவத்தை சுட்டிக்காட்டி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் சமாதானத்தை உறுப்பினர்கள் ஏற்காததால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் கண்டனம்: முன்னதாக, மக்களவையில் உறுப்பினர்கள் அமளிக்கு இடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது அவர், “மக்களவை பாதுகாப்பு மீறல் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தத் தேவையில்லை. அவர்கள் பாதுகாப்பு மீறலுக்கு கண்டனம் தெரிவிக்கலாம் ஆனால் அவை நடவடிக்கைகளை தடுக்கக் கூடாது. மேலும், எம்.பிக்கள் பாஸ் வழங்குதலில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.
திரிணமூல் எம்.பி. சஸ்பெண்ட்: மாநிலங்களவையிலும் பாதுகாப்பு அத்துமீறல் பிரச்சினையை முன்வைத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரக் ஓ ப்ரயினை மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார். அமைச்சர் பியூஷ் கோயல் விதி 256-ஐ பயன்படுத்திக் கொண்டுவந்த தீர்மானம் கடும் அமளிக்கு இடையேயும் நிறைவேற்றப்பட்டு டெரக் ஓ ப்ரெயின் எஞ்சியிருக்கும் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT