Published : 14 Dec 2023 06:07 AM
Last Updated : 14 Dec 2023 06:07 AM
புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமை பெற்றுள்ள காலிஸ்தான் தீவிரவாதியும், ‘நீதிக்கான சீக்கியர் அமைப்பின்’ தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னு, சில நாட்களுக்கு முன்பு மிரட்டல் விடுத்திருந்தார்.
பிரதமர் மோடி தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், இதனால் நாடாளுமன்றத்தின் மீது டிசம்பர் 13-ம் தேதி தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அப்படி இருந்தும் நாடாளுமன்றத்தில் நேற்று புகை குண்டு வீசப்பட்டது. எனவே, நாடாளுமன்றத்தில் அத்துமீறியவர்களுக்கும், காலிஸ் தான் அமைப்பினருக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறுகையில், ‘‘நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதை இச்சம்பவம் காட்டுகிறது. இரு இளைஞர்கள் அத்துமீறி மக்களவையில் நுழைந்ததும் இல்லாமல், வண்ண புகை குண்டையும் வீசியுள்ளனர். நாடாளுமன்றதாக்குதல் தினத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது பாதுகாப்பு குறைபாட்டை காட்டுகிறது’’ என்றார்.
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறுகையில், ‘‘சுமார் 20 வயதுமிக்க 2 இளைஞர்கள், பார்வையாளர் மாடத்திலிருந்தனர். அவர்களில் ஒருவர் எம்.பி.க்கள் இருக்கை பகுதியில் குதித்து சபாநாயகர் இருக்கை நோக்கி கோஷமிட்டபடி ஓடினர். அவர்கள் கையில் வைத்திருந்த சாதனத்தில் இருந்து நெடியுடன் கூடிய மஞ்சள் நிற புகை வெளியேறியது. அது நச்சு புகையாக இருக்கலாம். நாடாளுமன்ற தாக்குதல் தினத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதற்கு பாதுகாப்பில் மிகப்பெரிய குறைபாடு உள்ளதை காட்டுகிறது’’ என்றார்.
திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், ‘‘அத்துமீறி பார்வையாளர்கள் வீசியது விஷ புகையாகவோ அல்லது வெடிகுண்டாகவோ இருந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். எம்.பி.க்களின் பாதுகாப்பு உறுதி செய்யப் பட வேண்டும்’’ என்றார். திமுக எம்.பி. திருச்சி சிவா கூறுகையில், ‘‘நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. பலகட்டசோதனைக்குப் பின் புகை குப்பியுடன் எப்படி நாடாளுமன்றத்துக்கு உள்ளே நுழைய முடிந்தது?’’ என கேள்வி எழுப்பினார்.
இண்டியா கூட்டணி வெளிநடப்பு: மக்களவையில் நேற்று நடந்த பாதுகாப்பு குறைபாடு சம்பவம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதில் அளித்த மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், நிலைமையை ஆய்வு செய்து அவை நேற்று முடியும் முன் தகவல் அளிப்பதாக கூறினார். இதனால் அதிருப்தியடைந்த எதிர்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையில் குதித்த 2 நபர்களை எம்.பி.க்கள் விரட்டி பிடித்தனர். சில எம்.பிக்கள் அந்த இளைஞர்களின் கையை பிடித்துக் கொண்டனர். சிலர் தலையை பிடித்துக் கொண்டனர். பலர் இளைஞரின் கன்னத்தில் பளார், பளார் என அறைந்தனர். சிலர் குத்து விட்டனர். அதன்பின் அந்த இளைஞர்களை பாதுகாப்பு படை வீரர்கள் அழைத்துச் சென்றனர்.
வண்ண புகையா, ரசாயன புகையா? வண்ண புகை கேன்கள் அனைத்து இடங்களிலும் விற்கப்படுகிறது. விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது, ரசிகர்கள் இதை பயன்படுத்துவர். போட்டோ ஷூட் நிகழ்ச்சிகளிலும் இந்த வண்ண புகை பயன்படுத்தப்படுகிறது. ராணுவத்திலும் இந்த வண்ண புகை குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. எதிரியின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக இந்த வண்ண புகை குண்டுகள் பயன்படுத்தப்படும். நாடாளுமன்றத்துக்கு வரும் பார்வையாளர்களிடம் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து எம்.பி.க்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘மக்களவையில் நுழைந்தவர்கள் வெளியேற்றிய வண்ண புகை, சாதாரண புகை. பரபரப்பை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
காலணியில் வண்ண புகை குப்பி: பார்வையாளர் மாடத்திலிருந்து மக்களவைக்குள் குதித்த ஒரு இளைஞரை எம்.பி ஹனுமன் பெனிவால் என்பவர் முதலில் பிடித்தார். அதன்பின் மற்ற எம்.பி.க்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை சுற்றி வளைத்து தாக்கினர். பகுஜன் சமாஜ் எம்.பி ராம் ஷிரோமணி வர்மா கூறுகையில், ‘‘மக்களவையில் நுழைந்த ஒருவரிடம் லக்னோ முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை இருந்ததை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அவர் தனது காலணிக்குள் கண்ணீர் புகை குண்டையும், காகிதம் ஒன்றையும் மறைத்து வைத்திருந்தார். நாங்கள் அவரை பிடித்ததும் அவர் வண்ண புகை குப்பியை எடுத்து புகையை வெளியேற்றினார்’’ என்றார். காங்கிரஸ் எம்.பி குர்ஜித் சிங் அஜ்லா கூறுகையில், ‘‘ இளைஞர் கையில் இருந்த வண்ண புகை குப்பியை நான் பறித்து தூக்கி எறிந்தேன். இது மோசமான பாதுகாப்பு குறைபாடு’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT