Published : 14 Dec 2023 05:14 AM
Last Updated : 14 Dec 2023 05:14 AM

கேரள முதல்வரும் அமைச்சர்களும் துளியும் வெட்கமில்லாதவர்கள்: ஆளுநர் ஆரிப் முகமது கான் விமர்சனம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கும் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கண்ணுர் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபிநாத் ரவீந்திரனின் மறு நியமனத்தை உச்ச நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. இந்த விவகாரத்தில் ஆளுநர் தனது அதிகாரத்தை கைவிட்டுவிட்டதாக உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது.

இதைத் தொடர்ந்து கேரள பல்கலைக்கழகத்தின் செனட் அவைக்கு 4 மாணவர்களை ஆளுநர் நியமனம் செய்தார். ஆனால் இவர்கள் வலதுசாரி ஆதரவாளர்கள் என ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியும் அதன் மாணவர் அமைப்பும் (எஸ்டிஎப்) எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரத்தில் ஆளுநரை மாநில அமைச்சர்கள் விமர்சனம் செய்தனர். இதுகுறித்து ஆளுநர் ஆரிப் முகமது கான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செனட் அவைக்கு நான் யாரை நியமிக்கிறேன் என்பது குறித்து அவர்கள் எதற்கு கவலைப்பட வேண்டும்.முதல்வருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் துளியும் வெட்கமில்லை. ஒருவரை நியமிக்குமாறு நிதியமைச்சர் என்னிடம் கோரிக்கை வைக்கிறார். பல்கலைக்கழக துணைவேந்தரின் பரிந்துரை பட்டியலில் இல்லாதவர்களை நான் நியமித்தது இவர்களுக்கு எப்படித் தெரியும்?என்னிடம் பரிந்துரைக்குமாறு ஒருபட்டியலை அவர்கள் துணை வேந்தரிடம் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனுப்பிய பட்டியலை துணைவேந்தர் எனக்கு பரிந்துரை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுப்பேன். ஒருவரை பரிந்துரைக்க யாரும் என்னை வற்புறுத்த முடியாது. எனது அதிகாரத்தை எனது விருப்பப்படி பயன்படுத்துவேன். இவ்வாறு ஆரிப் முகமது கான் கூறினார். 4 மாணவர்களை ஆளுநர் நியமனம் செய்ததை கேரள உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x