Published : 13 Dec 2023 11:12 PM
Last Updated : 13 Dec 2023 11:12 PM
நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட அலட்சியப் போக்கு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “2001-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி அன்று புதுடெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இன்று சரியாக இதே நாளில் நாடாளுமன்றத்திற்குள் மீண்டும் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதேநாளில் மற்றுமொரு அதிர்ச்சிகரமான நிகழ்வு நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது.
மக்களவையில் இன்று அலுவல்கள் நடந்து கொண்டிருந்த போது, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் திடீரென தடுப்புகளை தாண்டி அவைக்குள் குதித்தனர். எம்.பி.க்கள் அமர்ந்திருந்த இருக்கைகள் மற்றும் மேசைகள் மீது தாவிச் சென்ற அவர்கள் மர்மப் பொருட்களை வீசியெறிந்தனர். அதில் இருந்து புகை வெளியேறியது. அந்த இளைஞர்கள் இருவரையும் எம்.பி.க்களே சுற்றி வளைத்துப் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அத்துமீறி உள்ளே நுழைந்த இரு இளைஞர்கள் மற்றும் வெளியே இருந்த இரண்டு பெண்கள் என இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு நான்கு கட்ட பாதுகாப்பு சோதனைகளைக் கடந்துதான் உள்ளே செல்ல முடியும். பாதுகாப்புப் படையினரின் மூன்று கட்ட சோதனைக்குப் பிறகே ஒருவர் பார்வையாளர்கள் அரங்கிற்குள் நுழைய முடியும். ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்கேனர் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்யப்படும்.பார்வையாளர்கள் அரங்கில் நுழைவதற்கு எம்.பி ஒருவரின் பரிந்துரை கடிதம் தேவை.
நுழைவாயில் சோதனை, வரவேற்பறையில் புகைப்படம் எடுக்கப்படும். இவ்வளவு ஏற்பாடுகளையும் மீறி நாடாளுமன்றத்தில் நடந்துள்ள நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட அலட்சியப் போக்கு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்” என்று வைகோ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT