Published : 13 Dec 2023 09:50 PM
Last Updated : 13 Dec 2023 09:50 PM
புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மண்ணெண்ணெய் விநியோக நிலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து மக்களவையில் திமுக எம்.பி.யான கனிமொழியின் கேள்விக்கு மத்திய எரிவாயுத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டேலி பதிலளித்துள்ளார்.
மக்களவையில் இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை திமுக துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி எழுப்பிய கேள்வியில், ‘தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய மண்ணெண்ணெயின் அளவை மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக குறைத்திருக்கிறதா? மண்ணெண்ணெய் விநியோக அளவை அதிகரிக்குமாறு தமிழகம் வைத்துவரும் கோரிக்கையை மத்திய அரசு அறிந்திருக்கிறதா? தமிழகத்தின் இந்த கோரிக்கை தொடர்பாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன?” எனக் கேட்டிருந்தார்.
இந்தக் கேள்விகளுக்கு மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டேலி அளித்த பதிலில், “இந்திய அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்து வருகிறது. சமைப்பதற்கும், விளக்கு எரிப்பதற்குமான தேவைக்காக இந்த விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், 2010-11 ஆண்டுகளில் இருந்தே பொது விநியோகத் திட்டத்தின் கீழான மண்ணெண்ணெய் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மண்ணெண்ணெய் எரிப்பதால் ஏற்படும் மாசுபடுதலை கணக்கில் கொண்டும், சமையல் கேஸ் பயன்பாடு அதிகரித்ததாலும், மின்சார பயன்பாடு அதிகரித்ததாலும், மாநிலங்கள் பல பொது விநியோகத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்தை ஊக்குவிக்காததாலும் மண்ணெண்ணெய் விநியோகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் நாட்டில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தாங்கள் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத பகுதிகளாக பிரகடனம் செய்துள்ளன. அதேசமயம், மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் இயற்கை சீற்ற காலங்கள், மத நிகழ்ச்சிகள், மீனவர்களுக்கான பயன்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக தேவைக்கேற்ப மாதா மாதம் மானியமற்ற விலையிலும் கூடுதல் மண்ணெண்ணெயை வழங்கப்படுகிறது. இருப்பினும், தமிழகம் போன்ற சில மாநிலங்களில் இருந்து மண்ணெண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. இந்த கோரிக்கைகள் மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
தமிழகத்துக்கு கடந்த 2018-19-ஆம் ஆண்டில் பொது விநியோக முறையில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 776 கிலோ லிட்டரும், மானியமற்ற விலையில் 17 ஆயிரத்து 040 லிட்டரும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2019-20 நிதியாண்டில் பொது விநியோகத் திட்டத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 320 கிலோ லிட்டரும், மானியமற்ற விலையில் 16 ஆயிரத்து 140 கிலோ லிட்டரும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2020-21 ஆம் நிதியாண்டில் பொது விநியோகத் திட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 168 கிலோ லிட்டரும், மானியமற்ற விலையில் 12 ஆயிரத்து 108 கிலோ லிட்டரும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
2021-22 ஆம் நிதியாண்டில் பொது விநியோகத் திட்டத்தில் 90 ஆயிரத்து 432 கிலோ லிட்டரும், மானியமற்ற விலையில் 10 ஆயிரத்து 764 கிலோ லிட்டரும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2022-23 நிதியாண்டில் பொது விநியோகத் திட்டத்தில் 54 ஆயிரத்து 240 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயும், மானியமற்ற விலையில் 7,536 கிலோ லிட்டரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று பதிலளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT