Published : 13 Dec 2023 04:57 PM
Last Updated : 13 Dec 2023 04:57 PM

மக்களவை ‘அத்துமீறல்’ பின்னணி முதல் ரூ.6,000-க்கான விதிகள் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.13, 2023

மக்களவையில் அத்துமீறல்... புகை வீச்சு... - நடந்தது என்ன?: மக்களவையில் புதன்கிழமை பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இருவர் அத்துமீறி எம்பிகள் இருந்த இருக்கையில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கைகளில் புகை கக்கும் கருவி வைத்திருந்ததும், அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறியதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக, அந்த இருவரும் பிடிக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறிய அந்த நபர்களைப் பிடிக்க எம்.பி.க்களும் உதவினர். அவர்கள் இருவரையும் அவைப் பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதற்கிடையே, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பெண் ஒருவர் கோஷம் எழுப்பியபடி போலீஸார் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியிருந்தது. இந்தப் பின்னணியில், நாடாளுமன்ற வளாகத்தில் காவல் துறையினர், உளவுத் துறையினர், பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 2001-ம் ஆண்டு இதே டிசம்பர் 13-ம் நாளில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த 5 பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். எனினும், பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே சுமார் 30 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிர விசாரணை: சபாநாயகர் விளக்கம்: மக்களவையில் இருவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் குறித்து மக்களவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, “பூஜ்ஜிய நேரத்தில் நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி போலீசாருக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் அது வெறும் புகை என தெரியவந்துள்ளது. எனவே, புகை குறித்து அச்சப்படத் தேவையில்லை” என கூறினார்.

இதையடுத்து, வழக்கமான நாடாளுமன்ற அலுவலைத் தொடர அவர் முயன்றார். அப்போது குறிக்கிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இது குறித்து அவையில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த சபாநாயகர், “விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டத்துக்குப் புறம்பாக அத்துமீறிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இருவரும்கூட கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

மக்களவை அதிர்ச்சி சம்பவத்தை விவரித்த தமிழக எம்.பி.க்கள்: மக்களவை அத்துமீறல் சம்பவம் குறித்து திமுக எம்பி கனிமொழி கூறும்போது "இது மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவம். ஒருவேளை மக்களவையில் பிரதமர், உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும்போது இவ்வாறாக நிகழ்ந்திருந்தால் என்னவாகும்? அது விஷப் புகையைக் கக்கியிருந்தாலோ அல்லது வேறு எதும் வெடிகுண்டாகவே இருந்திருந்தால் என்னவாகும்? எம்.பி,க்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார்.

“நாடாளுமன்றத்தில் இன்று நடந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். பலகட்ட சோதனைக்குப் பின்னர் புகை கக்கும் கன்டெய்னருடன் ஒருவர் எப்படி நுழைய முடியும்? இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். உறுப்பினர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று திமுக எம்.பி திருச்சி சிவா கூறினார்.

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் “இருவர் கைகளிலும் வண்ணப் புகை உமிழும் கருவி இருந்தது. அது விஷப் புகையாக இருக்கலாம், கண்ணீர் புகையாக இருக்கலாம், ஏன் புகை வெடிகுண்டாகவும் இருக்கலாம். நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய பாதுகாப்பு மீறல் நடந்துள்ளது” என்றார்.

இதனிடையே, மக்களவைக்குள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருக்கை மீது குதித்த நபரிடம் இருந்து தாம்தான் புகை கக்கிய கேனைப் பறித்து வெளியே எறிந்ததாகக் கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. குர்ஜீஇத் சிங் அஜ்லா.

பாஜக எம்.பி அளித்த விசிட்டர் பாஸ்?: மக்களவையில் புதன்கிழமை பாதுகாப்பு மீறல் நடந்துள்ள நிலையில், மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர், மைசூரு மக்களவையின் பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். அத்துமீறிய இவர்களின் பெயர் சஹார் சர்மா, மனோரஞ்சன் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் பார்வையாளராக உள்ளே செல்வதற்கு குறிப்பிட்ட எம்பியின் பரிந்துரை கடிதம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே நுழைவுச் சீட்டு வழங்கப்படும். அவர்களுக்கு பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும் மேலும் அடையாள அட்டைகளை சரிபார்க்கப்படும் அதன்பிறகுதான் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி: மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர், மைசூரு தொகுதி பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நிலையில், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “இருவர் மக்களவையில் அத்துமீறி நுழைந்தது மிகவும் தீவிரமான பிரச்சினை. இது வெறும் மக்களவை மற்றும் மாநிலங்களவை பற்றிய கேள்வி அல்ல. நாடாளுமன்றத்துக்குள் போடப்பட்டிருக்கும் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி எப்படி இருவர் உள்ளே நுழைந்து பாதுகாப்பு மீறலை ஏற்படுத்த முடிந்தது என்பது தொடர்பானது. இந்தச் சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறோம். மேலும், இந்த தவறு குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோருகிறோம். அவையை ஒத்திவைக்க கேட்டுக்கொள்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்து இரு அவைகளிலும் விளக்கம் தர வேண்டும்” என்றார்.

யாருக்கெல்லாம் ரூ.6,000 நிவாரணத் தொகை?: மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்களை இழந்த குடும்பங்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கும் முறையை பின்பற்றி ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தைப் பொறுத்த வரை அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில்: குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் உள்ளவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35-லிருந்து ரூ.38-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44-லிருந்து ரூ.47 ஆகவும் உயரும். இதன்மூலம் சுமார் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 புதிய முதல்வர்களின் ஆர்எஸ்எஸ் பின்னணி மீது காங். விமர்சனம்: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் புதிய முதல்வர்களாக புதிய முகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் “மாநில அதிகாரங்களுக்கு பாஜக முடிவு கட்டுகிறது” என்று காட்டமாக கூறியுள்ளது. மேலும் , “முதல்வர்களாக இந்தப் புதிய முகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சில காரணங்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் வலுவான ஆர்எஸ்எஸ் - ஏபிவிபி பின்னணி கொண்டவர்கள்” என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.

நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள்: தலைமைச் செயலாளர் விளக்கம்: எண்ணூர் கழிமுக பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க தடுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரையிலும், திருவள்ளூர் மாவட்ட வரம்பிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள் படரவில்லை. டிசம்பர் 12 அன்று திருவள்ளூர் மாவட்ட நீர்நிலை பகுதியிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எண்ணூர் பகுதிகளில் வெள்ள நீரில் எண்ணெய் கலந்தது இயற்கை பேரிடர் அல்ல என்றும், மனிதரால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை பேரிடர் என பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கில் சிபிசிஎல் நிறுவனம் மீது தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை துரிதப்படுத்துமாறு தமிழக அரசு, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க சிபிசிஎல் நிறுவனத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

காசாவில் போர் நிறுத்தம் வலியுறுத்தும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு: காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐ.நா பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

இதனிடையே காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது என்றும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x