Published : 13 Dec 2023 06:10 PM
Last Updated : 13 Dec 2023 06:10 PM
புதுடெல்லி: மக்களவையில் இன்று (டிச.13) நடைபெற்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து விளக்கம் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் இன்று (டிச.13) பாதுகாப்பு மீறல் நடந்துள்ள நிலையில், நாடாளுமன்றமே அதிர்ச்சியில் உள்ளது. மக்களவையில் பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இருவர் அத்துமீறி இருக்கையில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கைகளில் புகை கக்கும் கருவி வைத்திருந்ததும், அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறியதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக, அந்த இருவரும் பிடிக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. பாஜக எம்.பி பியூஷ் கோயல் இது குறித்து கூறும்போது, "மாநிலங்களவை மூத்தவர்கள் சபை என்று நான் நினைக்கிறேன். இதையெல்லாம் விட இந்த நாடு பலமானது என்ற செய்தியை நாம் தெரிவிக்க வேண்டும். எனவே, சபை நடவடிக்கைகள் தொடர வேண்டும். காங்கிரஸ் இதை அரசியலாக்குகிறது என நினைக்கிறேன். இது நாட்டுக்கு நல்ல செய்தியல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இருவர் மக்களவையில் அத்துமீறி நுழைந்தது மிகவும் தீவிரமான பிரச்சினை. இது வெறும் மக்களவை மற்றும் மாநிலங்களவை பற்றிய கேள்வி அல்ல. நாடாளுமன்றத்துக்குள் போடப்பட்டிருக்கும் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி எப்படி இருவர் உள்ளே நுழைந்து பாதுகாப்பு மீறலை ஏற்படுத்த முடிந்தது என்பது தொடர்பானது. இந்தச் சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறோம். மேலும் இந்த தவறு குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோருகிறோம். அவையை ஒத்திவைக்க கேட்டுக்கொள்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து இரு அவைகளிலும் விளக்கம் தர வேண்டும்”என்றார்.
அப்போது, அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறும்போது, "இதுபற்றி அறிந்தவுடன், பாதுகாப்பு இயக்குநருக்கு போன் செய்தேன். அவரிடம் அப்டேட் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன். அந்த நேரத்தில் அவர் எனக்கு கொடுத்த அப்டேட்டை, சபையில் பகிர்ந்து கொண்டேன். இது கவலைக்குரிய விஷயம்தான், ஆனால் விவரங்களுக்கு காத்திருப்போம், பின்னர்தான் இது குறித்து விவாதிக்க முடியும் என்றார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT