Published : 13 Dec 2023 05:31 PM
Last Updated : 13 Dec 2023 05:31 PM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பஜன்லால் சர்மா நாளை மறுநாள் (டிச.15) பதவியேற்க உள்ளதாக மாநில பாஜக தலைவர் சி.பி.ஜோஷி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் வேட்பாளர் ஒருவரின் மறைவை அடுத்து 199 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 69 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரை, அதாவது முதல்வரை தேர்வு செய்யும் கூட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் வாசுதேவ் தேவ்நானி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிபி ஜோஷி, “பஜன்லால் ஷர்மா முதல்வராகவும், தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்வர்களாகவும் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர். ஜெய்ப்பூரின் ராம்நிவாஸ் பாக்கில் உள்ள ஆல்பர்ட் ஹாலில் பதவியேற்பு விழா நடைபெறும்” என தெரிவித்தார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாக்கள்: மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ், துணை முதல்வர்களாக ஜக்தீஷ் தேவ்டா, ராஜேந்திர சுக்லா ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் மங்குபாய் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதேபோல், சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் ராய்ப்பூரில் இன்று பதவியேற்றுக்கொண்டார். அருண் சாவோ மற்றும் விஜய் ஷர்மா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர். மூவருக்கும் ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT