Published : 13 Dec 2023 02:40 PM
Last Updated : 13 Dec 2023 02:40 PM
புதுடெல்லி: மக்களவையில் இன்று (டிச.13) பாதுகாப்பு மீறல் நடந்துள்ள நிலையில், அங்கே நடந்த சம்பவத்தை தமிழக எம்.பி.க்கள் விவரித்துள்ளனர். கடந்த 2001 டிசம்பர் 13-ல் நாடாளுமன்ற வளாகத் தாக்குதல் நடந்ததை நினைவு கூர்ந்து இன்று அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், அதே நாளில் இன்று பாதுகாப்பு மீறல் நடந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
திமுக எம்.பி. கனிமொழி: “மக்களவையில் வழக்கமான அலுவல்கள் நடந்து கொண்டிருந்தன. திடீரென இருவர் பார்வையாளர் அரங்கிலிருந்து எம்.பி.க்கள் இருக்கைகள் மீது குதித்தனர். அவர்கள் கையில் புகை உமிழும் கருவி இருந்தது. அது என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அதிலிருந்து வந்த புகை சாதாரணமாக இல்லை. நெடியுடன் கூடியதாக இருந்தது. இது மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவம். ஒருவேளை மக்களவையில் பிரதமர், உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும்போது இவ்வாறாக நிகழ்ந்திருந்தால் என்னவாகும்? அது விஷப் புகையைக் கக்கியிருந்தாலோ அல்லது வேறு எதும் வெடிகுண்டாகவே இருந்திருந்தால் என்னவாகும்? எம்.பி,க்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார் திமுக எம்.பி கனிமொழி.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி: “நாடாளுமன்றத்தின் பார்வையாளர் அரங்கில் ஒருவர் அமர்கிறார் என்றால், அது யாரேனும் எம்பியின் பரிந்துரைக் கடிதம் இருந்தாலே சாத்தியப்படும். கடிதம் இருந்தால் மட்டும் போதாது பலகட்ட பாதுகாப்பு கெடுபிடிகளைத் தாண்டியே வளாகத்துக்குள் வர இயலும். ஆனால் அத்தனையும் தாண்டி இப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதுவும் நாடாளுமன்றம் தாக்கப்பட்ட நாளிலேயே நடந்துள்ளது. இது எம்.பி.க்கள் பாதுகாப்பில் மிகப் பெரிய மீறல்” என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.
திமுக எம்.பி. திருச்சி சிவா: “நாடாளுமன்றத்தில் இன்று நடந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். பலகட்ட சோதனைக்குப் பின்னர் புகை கக்கும் கன்டெய்னருடன் ஒருவர் எப்படி நுழைய முடியும்? இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். உறுப்பினர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று திமுக எம்.பி திருச்சி சிவா கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்: “பார்வையாளராக வருபவர் நிச்சயமாக எம்.பி,யின் பரிந்துரைக் கடிதத்துடனேயே வந்திருக்க வேண்டும். அதனால் கோப்புகளில் இருந்து அந்த இருவர் யார் என்பதையும், அவர்களைப் பரிந்துரைத்தது யார் என்பதையும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இந்த நபர்கள் ஏன் இப்படிச் செய்தார்கள் என்பதெல்லாம் விசாரணையில் தெரியவரும். இந்தச் சம்பவம் கண்டனத்துக்குரியது” என்றார் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்.
மிகப் பெரிய பாதுகாப்பு மீறல்: அவைக்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் அளித்தப் பேட்டியில், “அரங்கில் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. திடீரென பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருவர் குதித்தனர். ஒருவர் உறுப்பினர்கள் இருக்கையில் குதித்தார். இன்னொருவர் சபாநாயகர் நோக்கி ஓடினார். இருவர் கைகளிலும் வண்ணப் புகை உமிழும் கருவி இருந்தது. அது விஷப் புகையாக இருக்கலாம், கண்ணீர் புகையாக இருக்கலாம், ஏன் புகை வெடிகுண்டாகவும் இருக்கலாம். நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய பாதுகாப்பு மீறல் நடந்துள்ளது” என்றார்.
நடந்தது என்ன? - நாடாளுமன்றத்தில் மக்களவையில் இன்று (டிச.16) அவை அலுவல்கள் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருவர் இருக்கைகள் மீது குதித்தனர். அவர்கள் கையிலிருந்து கேனில் இருந்து புகை வெளியேறியதால் அவைக்குள் புகை சூழ்ந்தது. அந்த நபர்களைப் பிடிக்க எம்.பி.க்களும் உதவினர். அவர்கள் இருவரையும் அவைப் பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதற்கிடையே, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பெண் ஒருவர் கோஷம் எழுப்பியபடி போலீஸார் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியிருந்தது. இதற்கிடையில், நாடாளுமன்ற வளாகத்தில் காவல் துறையினர், உளவுத் துறையினர், பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் தற்போது அவர் மீண்டும் கூடி அலுவல்கள் தொடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT