Published : 13 Dec 2023 12:04 PM
Last Updated : 13 Dec 2023 12:04 PM
புதுடெல்லி: கடந்த 2021 ஆம் ஆண்டில் 74.1 சதவீத இந்தியர்களால் ஆரோக்கியமான உணவைப் பெற முடியவில்லை என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான உணவைப் பெற முடிந்தவர்களில் எண்ணிக்கை 76.2 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியமான உணவைப் பெறும் தகுதி பாகிஸ்தானில் 82.2 சதவீத மக்களிடமும், வங்கதேசத்தில் 66.1 சதவீத மக்களிடமும் இல்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.வ்இதற்கும் அதிகரிக்கும் உணவின் விலை அல்லது விலைவாசிக்கு ஏற்ற ஊதிய உயர்வு இல்லாமையே காரணம் எனக் கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான பிராந்திய கண்ணோட்டம் 2023: புள்ளியியல் மற்றும் போக்குகள் (Regional Overview of Food Security and Nutrition 2023: Statistics and Trends) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, உணவின் விலை உயர்வதும், சம்பள உயர்வு ஏற்படுவது தடைபடுவதும் தொடர்ந்து நீடித்தால் ஆரோக்கியமான உணவைப் பெற இயலாமல் இன்னும் இன்னும் அதிகமானோர் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரியவருகிறது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் உணவு, கால்நடைத் தீவனம், எரிபொருள், உரங்கள், நிதி என ஐந்து விஷயங்களில் ஆசிய, பசிபிக் பிராந்தியம் கடுமையான நெருக்கடியை சந்தித்தது. இன்னமும்கூட சில பிராந்தியங்களில் நீடித்த தாக்கம் இருக்கின்றது. இந்தப் பிராந்தியத்தில் மட்டும் இப்போது 370.7 மில்லியன் மக்கள் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் தவிக்கின்றனர். இது உலகளவில் ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் தவிப்போரின் எண்ணிக்கையில் பாதியளவாகும் என்று கூறுகின்றது அறிக்கை.
உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டோரில் ஆண்களைவிட பெண்களே அதிகம் என்றும், இனப்பெருக்க வயதில் உள்ள பெண்கள் மத்தியிலேயே ரத்த சோகை அதிகமாக இருப்பதாகவும் கூறுகின்றது.
குறிப்பாக, இந்திய மக்கள் தொகையில் 16.6 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் உடல்நலன் தாண்டி பொருளாதார, சமூக பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது. இருப்பினும் 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை ஒப்பிடுகையில் இந்தியாவில் இது சற்றே குறைந்துள்ளதாம்.
ஆசிய கண்டத்தைப் பொறுத்தவரையில் தெற்காசியாவில் உணவு பாதுகாப்பின்மை அதிகம்தான் என்றாலும் கூட கிழக்கு ஆசியாவிலேயே இது அதிகம் எனத் தெரிகிறது.
இந்தியாவைப் பொறுத்த வரையில், 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் 31.7 சதவீதம் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக (ஸ்டன்டட் குரோத் உடையவர்களாக) உள்ளனர். வயதுக்கு ஏற்ற வளர்ச்சி (அதாவது போதிய உயரம், உடல் எடை) இல்லாதவர்கள் எண்ணிக்கை ஆசியாவிலேயே இந்தியாவில்தான் 18.7% என்றளவில் அதிகமாக உள்ளது. அதேவேளையில் 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 2.8% பேர் அளவுக்கு அதிகமான உடல் எடையோடு இருக்கின்றனர். அதுவும் ஆரோக்கியமான குழந்தைப் பருவத்துக்கு அச்சுறுத்தலானதே என அறிக்கை குறிப்பிடுகின்றது.
இந்தியாவில் 15 முதல் 49 வயது வரையிலான பெண்களில் 53 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகின்றது. அதேபோல் தேசத்தில் 1.6 சதவீத பெரியவர்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக பல்வேறு முக்கியமான புள்ளிவிவரங்களையும் உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) அறிக்கை வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT