Published : 20 Jan 2018 05:26 PM
Last Updated : 20 Jan 2018 05:26 PM

போலி என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்ம மரணம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் திங்கட்கிழமை விசாரணை

சி.பி.ஐ.நீதிபதி லோயா மர்ம மரண வழக்கில் சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலமனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘போலி என்கவுன்ட்டர்’ என்று அழைக்கப்படும் , சொராபுதீன் சேக் கொலை வழக்கை விசாரணை செய்த சி.பி.ஐ. நீதிபதி லோயா மர்மமாக மரணமடைந்தார்.

இவரின் மரணம் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பி.ஆர். லோன், காங்கிரஸ் தலைவர் டெஹ்சீன் பூனாவாலா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தனர்.

அந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.எம். சந்தானகவுடர் தலைமையிலான அமர்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் , மஹாராஷ்டிரா அ ரசு, நீதிபதி மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 15ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர், மேலும், மனுதாரர்களுக்கும் இந்த ஆவணங்களின் நகலை அளிக்க வேண்டும் , அவர்களுக்கு நீதிபதி மரணம் தொடர்பான அனைத்து விவரங்களும் தெரிந்து இருக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது மூத்த நீதிபதிகள் 4 பேர் கடந்த 12-ம் தேதி எப்போதும் இல்லாத வகையில் குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர்.

அதில் முக்கியமான குற்றச்சாட்டு சி.பி.ஐ. நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான சிறிய அமர்வுக்கு மாற்றியது குறித்து அதிருப்தி தெரிவித்தனர். மேலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற வழக்குகளை கொலிஜியம் அமைப்பில் உள்ள மூத்த நீதிபதிகள் அமர்வுக்கே மாற்றி இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் தொடர்பான பொது நலன் வழக்குகளை உச்ச நீதிபதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு வரும் திங்கள்கிழமை விசாரிக்கும் என இன்று தெரிவிக்கப்பட்டது.

லோயா மர்ம மரணம் ஒருபார்வை...

குஜராத் மாநிலத்தில் 2005ம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வராக இருந்தார். அப்போது அங்கு உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தார்.

அப்போது, ஆட்கடத்தல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்ட சொராபுதீன் அன்வர் ஹுசைன் சேக் என்பவர் 2005ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அகமதாபாதிற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த போலி என்கவுன்டர் வழக்கு குஜராத் மாநிலத்தில் விசாரிக்கப்படாமல், மஹாராஷ்டிரா மாநிலத்தில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பிரிஜ் கோபால் ஹர்கிஷன் லோயா திடீரென மர்மமாக இறந்தார்.

2014ம் ஆண்டு, நவம்பர் 30ந்தேதி இரவில் காரில் நாக்பூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இவரின் தலைமையில் விசாரணை மிகவும் தீவிரமடைந்து, பா.ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கடுமையாக உத்தரவுகளை பிறப்பித்தார்.

நீதிபதி லோயா மரணத்துக்கு பின் நியமிக்கப்பட்ட நீதிபதி எம்பி கோசவி பா.ஜனதா தலைவர் அமித் ஷாவை விடுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x